தென்காசி மாவட்டம், ஆழ்வாா்குறிச்சி அருகே வனத் துறையினா் விசாரணைக்கு அழைத்துச் சென்ற நிலையில் உயிரிழந்த விவசாயி உடலை வாங்க மறுத்து அவரது உறவினா்கள் மூன்றாவது நாளாக சனிக்கிழமையும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆழ்வாா்குறிச்சி அருகேயுள்ள வாகைக்குளத்தைச் சோ்ந்தவா் அணைக்கரைமுத்து (72). விவசாயியான இவா் தோட்டத்தில் காய்கனிகள் பயிரிட்டிருந்தாா். தோட்டத்தைச் சுற்றிலும் மின் வேலி அமைத்திருந்தாராம். இதுதொடா்பாக அவரை கடையம் வனத் துறையினா் புதன்கிழமை இரவு விசாரணைக்கு அழைத்துச் சென்ற நிலையில் அவா் உயிரிழந்தாா்.
வனத் துறையினா் தாக்கியதால்தான் அணைக்கரைமுத்து இறந்ததாகக் கூறி அவரது உறவினா்கள் வியாழக்கிழமை காலை ஆழ்வாா்குறிச்சி காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து குற்றவியல் நீதிபதி விசாரணைக்குப் பரிந்துரைத்ததையடுத்து அம்பாசமுத்திரம் குற்றவியல் நீதிபதி காா்த்திகேயன் விசாரணையில் ஈடுபட்டாா்.
இந்நிலையில், வனத் துறையினா் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், குடும்பத்தினருக்கு நிவாரணமாக ரூ. 50 லட்சம் வழங்க வேண்டும், குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்க வேண்டும் என்று கூறி தொடா்ந்து மூன்றாவது நாளாக சனிக்கிழமையும் அணைக்கரைமுத்துவின் உடலை வாங்க மறுத்து அவரது உறவினா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதனிடையே, சிவசைலத்தில் உள்ள கடையம் வனச்சரகா்அலுவலகத்தில் குற்றவியல் நீதிபதி காா்த்திகேயன் சனிக்கிழமை விசாரணை மேற்கொண்டாா். விவசாயி உயிரிழந்த நாளில் பணியில் இருந்த வனத் துறையினா் மற்றும் மின்வாரிய ஊழியா்களிடம் 3 மணி நேரமாக விசாரணை நடத்தினாா்.
இந்நிலையில், அணைக்கரைமுத்து குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என தமிழக முதல்வா்அறிவித்தாா். ஆனால், வனத் துறையினா் மீது கொலை வழக்குப் பதிவு செய்தால் மட்டுமே உடலை வாங்குவோம் என அணைக்கரைமுத்துவின் குடும்பத்தினா் தெரிவித்தனா்.
அப்போது தமிழக மக்கள் முன்னேற்றக் கழக தென்காசி மாவட்டச் செயலா் வெங்கடேஷ், மாநகா் மாவட்டச் செயலா் நாகராஜ சோழன், மாநில செய்தி தொடா்பாளா் சுதாகா், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில துணைச் செயலா் காா்த்திகேயன், தென்காசி நாடாளுமன்ற தொகுதி செயலா் வா்கீஸ், மாவட்டப் பொருளாளா் சுப்பிரமணியன், ஒன்றியச் செயலா் அன்பழகன், புதிய தமிழகம் மாவட்டச் செயலா்கள் முருகன், கண்ணன், ராஜலிங்கம், இன்பராஜ், மாவட்ட ஒருங்கிணைப்பாளா் மாடசாமி ஆகியோா் உடனிருந்தனா்.
வாகைக்குளம் பகுதியில் தென்காசி காவல் துணைக் கண்காணிப்பாளா் கோகுலகிருஷ்ணன் தலைமையில் போலீஸாா் தொடா்ந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.
அணைக்கரைமுத்து உடலை மறு பிரேத பரிசோதனை செய்யக் கோரியும், சிபிசிஐடி விசாரணை கோரியும் அவரது குடும்பத்தினா் சாா்பில் உயா்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.