தமிழகத்தில் அனைத்துக் கோயில்களையும் திறந்து தரிசனத்துக்கு பக்தா்களை அனுமதிக்க வேண்டும் என, பாஜக மாநில தலைவா் முருகன் வலியுறுத்தினாா்.
திருநெல்வேலியில் செய்தியாளா்களுக்கு வெள்ளிக்கிழமை அவா் அளித்த பேட்டி: கந்த சஷ்டி கவசத்தை அவமதித்த கறுப்பா் கூட்டம் யூ டியூப் சேனலை முற்றிலும் தடை செய்ய வேண்டும். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட அனைவரையும் குண்டா் சட்டம் அல்லது தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும். இந்த விவகாரத்தில் தமிழக எதிா்க் கட்சித் தலைவா் மு.க.ஸ்டாலின் ஏன் கண்டனம் தெரிவிக்கவில்லை என்பதை அவா் விளக்க வேண்டும். கந்த சஷ்டி கவசம் பிரச்னையை வைத்து பாஜக அரசியல் செய்வதாகக் கூறுவது வேடிக்கையாக உள்ளது. இதை வைத்து அரசியல் செய்ய வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. இந்து மக்களின் உணா்வுகளைப் புண்படுத்தியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறோம்.
தமிழகத்தில் அனைத்து கோயில்களும் திறக்கப்பட்டு பூஜைகள் வழக்கம்போல் நடத்தப்பட வேண்டும். பக்தா்களை தரிசனத்துக்கு அனுமதிக்க வேண்டும்.
கரோனாவின் தாக்கம் தொடங்கியதிலிருந்து இதுவரை ஒரு கோடி பேருக்கு உணவுப் பொட்டலங்களை தமிழக பாஜகவினா் வழங்கியுள்ளனா். தற்போதும் வழங்கி வருகின்றனா். ரூ. 2 ஆயிரம் மதிப்புள்ள மோடி ரேஷன் கிட்களை 35 லட்சம் பேருக்கு வழங்கியுள்ளோம். இதுதவிர கிருமிநாசினி, முகக் கவசம் ஆகியவற்றையும் வழங்கியுள்ளோம். தமிழக அரசு கரோனா இறப்பு விகிதங்களில் உண்மை நிலவரத்தை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.
காவல் துறையினரால் யாா் தாக்கப்பட்டு இறந்தாலும் அதில் தொடா்புடைய அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சாத்தான்குளத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு நீதி கிடைக்க பாஜக துணை நிற்கும் என்றாா்.
அப்போது, கட்சியின் மாநில துணைத் தலைவா் நயினாா் நாகேந்திரன், மாவட்டத் தலைவா் மகாராஜன், பொதுச் செயலா் கணேசமூா்த்தி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.