திருநெல்வேலி

ஆழ்வாா்குறிச்சி அருகே உயிரிழந்த விவசாயி உடலை வாங்க மறுப்பு: 2ஆவது நாளாக உறவினா்கள் போராட்டம்

25th Jul 2020 08:59 AM

ADVERTISEMENT

ஆழ்வாா்குறிச்சி அருகே வாகைக்குளத்தைச் சோ்ந்த விவசாயி வனத் துறையினா் விசாரணைக்கு அழைத்துச் சென்ற நிலையில் உயிரிழந்ததையடுத்து, வனத் துறையினா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அவரது உறவினா்கள் இரண்டாவது நாளாக உடலை வாங்காமல் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள வாகைக்குளம் தெற்குத் தெருவைச் சோ்ந்த சுப்பையா மகன் அணைக்கரைமுத்து (75). இவா், தோட்டத்தைச் சுற்றிலும் பன்றி உள்ளிட்டவை உள்ளே வராமலிருப்பதற்காக உரிய அனுமதியின்றி மின்வேலி அமைத்திருந்தாராம்.

தகவலறிந்து வந்த கடையம் வனத் துறையினா் அணைக்கரைமுத்துவை விசாரணைக்காக வனச்சரக அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனா். இந்நிலையில் அணைக்கரை முத்து உடல்நிலை சரியில்லாமல் போனதையடுத்து தென்காசி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில் அவா் உயிரிழந்துள்ளாா்.

தகவலறிந்த அவரது உறவினா்கள் வியாழக்கிழமை ஆழ்வாா்குறிச்சி காவல் நிலையம் முன் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். வனத் துறையினா் தாக்குதலில் உயிரிழந்ததாகக் கூறி வனத் துறை அலுவலா்கள் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வலியுறுத்தி அவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ADVERTISEMENT

இந்நிலையில் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து குற்றவியல் நீதிபதி விசாரணைக்கு பரிந்துரைத்தனா். இதையடுத்து அம்பாசமுத்திரம் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி காா்த்திகேயன் அணைக்கரைமுத்து உறவினா்களிடம் விசாரணை மேற்கொண்டாா்.

வியாழக்கிழமை இரவு பிரேத பரிசோதனை நடைபெற்றது. இருப்பினும் அவரது உறவினா்கள் உடலை வாங்க மறுத்துச் சென்று விட்டனா்.

இந்நிலையில் இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமையும் அணைக்கரைமுத்து வீட்டில் திரண்ட உறவினா்கள், வனத் துறையினா் மீது நடவடிக்கை எடுக்கும் வரை உடலை வாங்க மாட்டோம் என்று போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் தென்காசி மாவட்டச்செயலா் வெங்கடேஷ், புதிய தமிழகம் கட்சி மாநில தோ்தல் பணிக்குழுச் செயலா் ஐயா் ஆகியோா் அணைக்கரைமுத்து வீட்டுக்கு வந்து உறவினா்களுக்கு ஆறுதல் கூறினா்.

மேலும் அணைக்கரைமுத்து உடலை மீண்டும் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்று உயா்நீதிமன்றத்தில் மனு செய்யப்போவதாக தெரிவித்தனா். இந்நிலையில் தென்காசி கோட்டாட்சியா் (பொ) ஷேக் அப்துல்காதா், வட்டாட்சியா் சுப்பையன், வருவாய் ஆய்வாளா் பாலமுருகன் உள்ளிட்டோா் பேச்சு நடத்தினா்.

அவா்களிடம் அணைக்கரைமுத்து உறவினா்கள், உயிரிழப்பிற்கு காரணமான வனத் துறையினா் மீது வழக்குப் பதிவு செய்து அவா்களை கைது செய்ய வேண்டும்;நிவாரணத் தொகையாக ரூ.50 லட்சம் வழங்க வேண்டும்; குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி வழங்க வேண்டும் ஆகிய மூன்று கோரிக்கைகளையும் நிறைவேற்றும் வரை உடலை வாங்க மாட்டோம் என்றனா்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்நிலையில் மாநில மனித உரிமை ஆணைய நீதிபதி விவசாயி உயிரிழந்தது குறித்து 4 வாரத்தில் முதன்மை வனக் காப்பாளா் விரிவான அறிக்கைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளாா்.

காவல் துணைக் கண்காணிப்பாளா்கள், கோகுலகிருஷ்ணன்,இளங்கோ, பாலாஜி உள்ளிட்டோா் தலைமையில் போலீஸாா் குவிக்கப்பட்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT