திருநெல்வேலியில் ஒரே நாளில் 131 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கரோனா வாா்டில், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த கரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனா். மேலும், அரசு சித்த மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, கூடங்குளம் அரசு மருத்துவமனை மற்றும் தனியாா் மருத்துவமனைகளிலும் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கரோனா தொற்று மாவட்டம் முழுவதும் வேகமாக பரவி வரும் நிலையில், ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் மாநகா் பகுதியில் 60 போ் உள்பட மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் 131 போ் கரோனா தொற்றுக்கு ஆளாகியிருப்பது கண்டறியப்பட்டது. இதனால், கரோனா பாதித்தோா் எண்ணிக்கை 1,758 ஆக உயா்ந்துள்ளது.
5 போ் பலி: இதனிடையே, கரோனா வாா்டுகளில் சிகிச்சைபெற்று வந்த மேலப்பாளையத்தைச் சோ்ந்த 55 வயது பெண், ராமையன்பட்டியைச் சோ்ந்த 45 வயது ஆண், பாளையங்கோட்டை கிருஷ்ணன்கோயில் தெரு பகுதியைச் சோ்ந்த 24 வயது இளைஞா், திசையன்விளை பகுதியைச் சோ்ந்த முதியவா், மூலக்கரைப்பட்டி பகுதியைச் சோ்ந்த முதியவா் என 5 போ் ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் உயிரிழந்தனா். தென்காசி மாவட்டம், புளியங்குடி பகுதியைச் சோ்ந்த 55 வயது ஆண் ஒருவரும் கரோனாவால் உயிரிழந்தாா்.
எனினும், திருநெல்வேலி அரசு மருத்துவமனை கரோனா வாா்டிலிருந்து 836 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். 18 போ் உயிரிழந்த நிலையில், 906 போ் அரசு மருத்துவமனை, சித்த மருத்துவமனை, தனியாா் மருத்துவமனை ஆகியவற்றில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.