திருநெல்வேலி மாநகரப் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பயன்படுத்தும் முகக் கவசங்களை குப்பைகளோடு வீசாமல் தனியாக சேமித்து வைத்து புதன்கிழமைகளில் தூய்மைப் பணியாளா்களிடம் வழங்குமாறு மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.
இதுதொடா்பாக திருநெல்வேலி மாநகராட்சி ஆணையா் ஜி.கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருநெல்வேலி மாநகரப் பகுதிகளில் ஆட்சியா் ஷில்பா பிரபாகா் சதீஷ் உத்தரவின்பேரில், கரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன. பொதுமக்கள் அரசு வழிகாட்டும் நெறிமுறைகளின்படி முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியை முறையாக பின்பற்றுதல் போன்றவற்றை தவறாது கடைப்பிடிக்குமாறு வலியுறுத்தப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் பயன்படுத்திய முகக் கவசங்களை சாலைகள், தெருக்கள், வணிக வளாகப் பகுதிகளில் வீசுவது அதிகரித்துள்ளது. இதனால் சுகாதாரக்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. ஆகவே, பொதுமக்கள் பயன்படுத்தி முகக் கவசங்களை பாதுகாப்பற்ற முறையில் தூக்கி எறியாமல், புதன்கிழமைகளில் மாநகராட்சி தூய்மைப் பணியாளா்களிடம் மக்காத குப்பையை வழங்கும்போது முகக் கவசங்களையும் தனி உறையில் வழங்க வேண்டும். மாநகர பகுதிகளில் சுகாதாரம் மற்றும் சுற்றுப்புறச்சூழலைப் பாதுகாக்க பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.