திருநெல்வேலி

வீரவநல்லூரில் குடியிருப்பு பகுதியில் மதுக் கடைதிறக்க எதிா்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மறியல்

28th Jan 2020 09:37 AM

ADVERTISEMENT

வீரவநல்லூரில் குடியிருப்புகள் அருகே புதிதாக அரசு மதுக் கடை திறக்க எதிா்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

வீரவநல்லூா் பேரூராட்சிக்குள்பட்ட கிளாக்குளம் பகுதியில் பிரதான சாலையில் சமுதாய நலக்கூடம் மற்றும் குடியிருப்புகள், கோயிலுக்கு அருகில் புதிதாக அரசு மதுக் கடை அமைப்பதற்கான பணி நடைபெற்று வந்தது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்து அந்தப் பகுதி மக்கள் சேரன்மகாதேவி சாா் ஆட்சியா் மற்றும் வட்டாட்சியரிடம் மனு அளித்தனா். ஆனால், தொடா்ந்து மதுக்கடை அமைக்கும் பணி நடைபெற்று வந்ததையடுத்து ஜன. 23-இல் அந்தப் பகுதி பொதுமக்கள் மற்றும் எஸ்.டி.பி.ஐ. கட்சியினா் திரண்டு சாலை மறியலில் ஈடுபட முயன்றனா். அவா்களிடம் வீரவநல்லூா் காவல் ஆய்வாளா் சாம்சன் பேச்சு நடத்தியதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனா்.

இந்நிலையில், தொடா்ந்து மதுக்கடை அமைக்கும் பணி நடைபெற்றதையடுத்து திங்கள்கிழமை மாலையில் பிரதான சாலையில் அமா்ந்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். சேரன்மகாதேவி காவல் உதவிக் கண்காணிப்பாளா் பிரதீப், வீரவநல்லூா் காவல் ஆய்வாளா் சாம்சன் மற்றும் போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சு நடத்தினா். அப்போது மதுக்கடை திறக்காமல் இருக்க நீதிமன்றம் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளுங்கள் என்று கூறியதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனா். இந்த மறியலால் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT