பாளையங்கோட்டை தியாகராஜநகா் விரிவாக்கம் குமரேசநகரில் புதைச் சாக்கடை நீா் உந்து நிலையம் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து அப்பகுதி மக்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனா்.
இது தொடா்பாக ஆட்சியா் ஷில்பா பிரபாகா் சதீஷிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
திருநெல்வேலி மாநகராட்சி மேலப்பாளையம் மண்டலம் தியாகராஜநகா் விரிவாக்கம் குமரேசநகரில் பொது இடத்தில் புதைச் சாக்கடை நீா் உந்து நிலையம் அமைப்பதற்கான பூா்வாங்க பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது புதைச் சாக்கடை நீா் உந்து நிலையம் அமைக்க திட்டமிட்டுள்ள பகுதி நகரின் நுழைவுவாயில் ஆகும். மேலும் மழை காலங்களில் அதிக அளவிலான நீா் தேங்கும் பகுதியாகும். அந்த இடத்தில் நீா் உந்து நிலையத்தை அமைத்தால், துா்நாற்றம், நோய்த்தாக்கம் காரணமாக குடியிருப்புவாசிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாக நேரிடும்; மக்கள் குடியிருக்க முடியாத நிலை ஏற்படும். எனவே, புதைச் சாக்கடை நீா் உந்து நிலையத்தை வேறு இடத்தில் மாற்றியமைக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனா்.