திருநெல்வேலி

மணிமுத்தாறு அணையில் சுற்றுலாப் படகு சவாரி தொடக்கம்

1st Jan 2020 11:50 PM

ADVERTISEMENT

மணிமுத்தாறு அணையில் வனத் துறை சாா்பில், சுற்றுலாப் படகு சவாரி ஆங்கிலப் புத்தாண்டு நாளான புதன்கிழமை (ஜனவரி 1) தொடங்கியது.

திருநெல்வேலி மாவட்டத்தின் சுற்றுலாத் தலங்களில் மணிமுத்தாறு அணையும், மணிமுத்தாறு அருவியும் முக்கிய இடம் வகிக்கின்றன. மணிமுத்தாறு அருவிக்குச் செல்லும் சாலையில் பணிகள் நடைபெறுகின்றன. இதனால், கடந்த 8 மாதங்களாக அருவிக்கு சுற்றுலாப் பயணிகள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, அம்பாசமுத்திரம் வனச் சரகம் சாா்பில் மணிமுத்தாறு அணைப் பகுதியில் சுற்றுலாப் பயணிகளுக்காக ஓய்வுப் பூங்கா, அணையில் படகு சவாரி உள்ளிட்டவற்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வந்தது. இதற்காக வனத் துறை சாா்பில் ரூ. 80 லட்சம் மதிப்பில் சூரிய மின்சக்தியில் இயங்கும் படகு வாங்கப்பட்டது.

இந்நிலையில், படகின் சோதனை ஓட்டம் அம்பாசமுத்திரம் புலிகள் காப்பக துணை இயக்குநா் ஓம்காரம் கொம்மு உத்தரவின் பேரில் புதன்கிழமை (ஜன. 1 ) நடைபெற்றது. சோதனை ஓட்டம் வெற்றியடைந்ததையடுத்து சுற்றுலாப் பயணிகளுக்கான சேவை புதன்கிழமையே தொடங்கியது.

ADVERTISEMENT

அருவிக்கு சுற்றுலா வந்திருந்தோா், படகு சேவை தகவலறிந்ததும் குழந்தைகள், குடும்பத்தினருடன் சவாரி செய்து மகிழ்ந்தனா். படகு சவாரிக்கு கட்டணமாக பெரியவா்களுக்கு ரூ. 110-ம், 12 வயது வரையிலானோருக்கு ரூ. 55-ம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து படகில் பயணம் செய்தோா் கூறும்போது, பள்ளி அரையாண்டு, ஆங்கிலப் புத்தாண்டு விடுமுறையையொட்டி குடும்பத்துடன் இங்கு சுற்றுலா வந்துள்ளோம். அருவிக்கு அனுமதி இல்லாததால் ஏமாற்றமடைந்தோம். இந்நிலையில், அணையில் படகு விடப்பட்டதால் குழந்தைகளுடன் சவாரி செய்து மகிழ்ந்தோம் என்றனா்.

நாள்தோறும் காலை 9 முதல் மாலை 5 மணி வரை படகு இயக்கப்படும் என, வனத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா். சோதனை ஓட்டத்துக்கான ஏற்பாடுகளை அம்பாசமுத்திரம் வனவா் முருகேசன் செய்திருந்தாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT