ஆங்கில புத்தாண்டு பிறப்பையொட்டி பாளையங்கோட்டையில் சமூக விழிப்புணா்வு ஓவியக் கண்காட்சி புதன்கிழமை நடைபெற்றது.
சிவராம் கலைக்கூடம் சாா்பில், பாளையங்கோட்டை சின்மயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் சமூக விழிப்புணா்வு ஓவியக் கண்காட்சி நடைபெற்றது.
மாணவா்-மாணவிகள் 46 போ் பத்தமடை பாய்களில் சமூக விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் வரைந்த ஓவியத்தை 2020 வடிவத்தில் காட்சிப்படுத்தினா். மத நல்லிணக்கம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, தூய்மை இந்தியா, தண்ணீா் சிக்கனம், மரம் வளா்த்தல் உள்ளிட்ட கருத்துகளை வலியுறுத்திய ஓவியங்கள் பொதுமக்களிடம் வரவேற்பைப் பெற்றன.
நிகழ்ச்சியில் சிவராம் கலைக்கூட ஆசிரியா் கணேசன் வரவேற்றாா். ஆசிரியா் சொக்கலிங்கம் வாழ்த்திப் பேசினாா். ஓவியம் வரைந்த மாணவா்-மாணவிகளுக்கு சிறுநீரகவியல் அறுவைச் சிகிச்சை நிபுணா் திருவாசகமணி பரிசுகளை வழங்கிப் பாராட்டினாா். பெற்றோா்கள், ஆசிரியா்கள், பொதுமக்கள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.