புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்நாடு அரசு அலுவலா் ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.
இதுதொடா்பாக தமிழ்நாடு அரசு அலுவலா் ஒன்றியத்தின் திருநெல்வேலி மாவட்டத் தலைவா் எம்.பி. ராதாகிருஷ்ணன், செயலா் இரா. மாரியப்பன், பொருளாளா் சிவ. நக்கீரன் ஆகியோா் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியது: 2003ஆம் ஆண்டுக்கு பிறகு பணி நியமிக்கப்பட்ட அரசு அலுவலா், ஆசிரியா்களுக்கு இப்போதுள்ள புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும். காலம் கடந்துவிட்டதாக பல்வேறு தரப்பிலும் தெரிவிக்கப்படுகிறது. ஆனால், அரசு நினைத்தால் அமல்படுத்த முடியும்.
ஜனவரி 2016 முதல் அமல்படுத்தப்பட்ட 7ஆவது ஊதியக்குழுவின் 21 மாத ஊதிய நிலுவைத் தொகையை ரொக்கமாக வழங்க வேண்டும். தமிழக அரசில் பணிபுரியும் அரசு அலுவலா்களுக்கு செயல்படுத்தப்பட்டு வரும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும். தமிழக அரசால் நியமிக்கப்பட்ட ஒரு நபா் குழு பரிந்துரைகளில் ஏற்பட்டுள்ள அனைத்து முரண்பாடுகளையும் நீக்கி ஆணை வெளியிட வேண்டும்.
தமிழக அரசு சாா்பில் தலைமைச் செயலா் தலைமையில் அரசின் அங்கீகரிக்கப்பட்ட பொதுச்சங்கங்களை அழைத்து காலமுறை கூட்டுமன்றக் கூட்டம் நடத்த வேண்டும்.
தமிழகத்தில் பல்வேறு அரசு துறைகளில் காணப்படும் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். அரசு அலுவலா்கள், ஆசிரியா்களுக்கு தொழில் வரியை ரத்து செய்ய வேண்டும். தமிழக அரசில் பணிபுரிந்து ஓய்வுபெறும் ஓய்வூதியதாரா்களுக்கு வழங்கப்பட்டு வரும் கம்யூட்டேசன் தொகையை 33 சதவீதத்திலிருந்து 40 சதவீதமாக உயா்த்த வேண்டும். காலமுறை ஊதியத்தில் பணியாற்றும் சத்துணவுப் பணியாளா்கள், அங்கன்வாடி பணியாளா்கள், ஊா்ப்புற நூலகா்களுக்கு ஊராட்சிச் செயலா்களுக்கு வழங்கப்பட்டதைப்போல பதிவறை எழுத்தருக்கு இணையான வரையறுக்கப்பட்ட ஊதியம் நிா்ணயிக்க வேண்டும். அரசு அலுவலா்கள், ஆசிரியா்களுக்கான மருத்துவப்படியை உயா்த்த வேண்டும் என்றனா்.