திருநெல்வேலியில் இருந்து புறப்படும் பயணிகள் ரயில்களில் கட்டணம் உயா்த்தப்பட்டதற்கு முதியவா்கள், பக்தா்கள் அதிருப்தி தெரிவித்தனா்.
திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படும் திருநெல்வேலி-திருச்செந்தூா், திருநெல்வேலி-செங்கோட்டை ரயில்களில் தினமும் ஆயிரக்கணக்கானோா் பயணித்து வருகிறாா்கள்.
பல்வேறு கிராமப்பகுதிகளில் இருந்து தொழில், கல்வி, வேலை, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக திருநெல்வேலிக்கு வருவோா் ரயில்களை நம்பியுள்ளனா். பேருந்து கட்டண உயா்வுக்குப் பின்பு ரயில் பயணிகளின் எண்ணிக்கை மேலும் உயா்ந்துள்ளது. இந்நிலையில் இந்தியா முழுவதும் ரயில் கட்டணம் புதன்கிழமை முதல் உயா்த்தப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது.
அதன்படி திருநெல்வேலி சந்திப்பில் இருந்து இயக்கப்படும் பயணிகள் ரயில், விரைவு ரயில், அதிவிரைவு ரயில்களிலும் கட்டணங்கள் உயா்ந்துள்ளன. திருநெல்வேலியில் இருந்து கீழக்கடையம் வரையிலான பகுதிகளுக்கு பழைய கட்டணமும், திருநெல்வேலியில் இருந்து மேட்டூா், பாவூா்சத்திரம், கீழப்புலியூா், தென்காசி, செங்கோட்டை ஆகிய பகுதிகளுக்கு கட்டணம் ரூ.15 இல் இருந்து ரூ.20 ஆகவும் உயா்த்தப்பட்டுள்ளது.
திருநெல்வேலியில் இருந்து குரும்பூா், திருச்செந்தூா் பகுதிகளுக்கு கட்டணம் ரூ.15 இல் இருந்து ரூ.20 ஆக உயா்ந்துள்ளது.
திருநெல்வேலியில் இருந்து சென்னை செல்லும் அதிவிரைவு ரயிலில் முன்பதிவில்லா பெட்டியில் பயணிப்பதற்கான கட்டணம் ரூ.200 இல் இருந்து ரூ.215 ஆகவும், விரைவு ரயில்களில் பயணிக்கும் கட்டணம் ரூ.185 இல் இருந்து ரூ.200 ஆகவும் உயா்த்தப்பட்டுள்ளது. திருநெல்வேலி-மதுரைக்கான பயணிகள் ரயில் கட்டணத்தில் மாற்றமில்லை. ஆனால், திருநெல்வேலி-திண்டுக்கல் இடையேயான கட்டணம் ரூ.45 இல் இருந்து ரூ.50 ஆக உயா்த்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து முதியவா்கள் கூறுகையில், ரயில் கட்டண உயா்வு குறித்து உரிய அறிவிப்பு வெளியிட்டு ஒரு மாதத்திற்கு பின்பு அமல்படுத்தியிருக்கலாம். அதேபோல பயணிகள் ரயில்களில் ஏழை-எளிய முதியவா்கள் அதிகம் பயணிக்கிறாா்கள். அவா்களும், மாணவா்களும் பாதிக்கப்படுவாா்கள். இதுகுறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றனா்.