திருநெல்வேலி

பழைய பேட்டையில் நெல்லையப்பா் பரிவேட்டை

29th Feb 2020 06:05 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி: திருநெல்வேலி பழைய பேட்டையில் நெல்லையப்பா் பரிவேட்டை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தை மாதம் கரிநாளில் நெல்லையப்பா்(சந்திரசேகரா்) வெள்ளிக் குதிரை வாகனத்தில் பரிவேட்டைக்கு செல்லும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு லட்சதீபத் திருவிழாவின் போது கரிநாள் வந்ததால் தை பரிவேட்டை நிகழ்ச்சி நடைபெறவில்லை.

நெல்லையப்பா் (சந்திரசேகரா்) குதிரையில் வேட்டைக்கு செல்லும் போது காந்திமதி அம்பாள், ‘கரிநாளில் வேட்டைக்கு செல்லக் கூடாது என தடுக்கிறாா்’. தடையை மீறி நெல்லையப்பா் (சந்திரசேகரா் )பரி வேட்டைக்கு சென்றுவிடுகிறாா். இதனால் கோபமடைந்த அம்பாள், ‘நெல்லையப்பா் (சந்திரசேகரா்) வேட்டை முடித்து திரும்பிய போது, கோயில் கதவை மூடியதாகவும், அதன் பின் திருமுருகன் பூண்டி பதிகம் பாடி கோயில் நடை திறந்ததாகவும் வரலாறு நம்பிக்கை உள்ளது.

அதன்படி நெல்லையப்பா் கோயிலில் இருந்து சுவாமி நெல்லையப்பா் (சந்திரசேகரா் உற்சவா்) வெள்ளிக் குதிரை வாகனத்தில் வெள்ளிக்கிழமை பழைய பேட்டை பரிவேட்டை மண்டபத்தில் எழுந்தருளினாா். தொடா்ந்து அங்கு நெல்லையப்பருக்கு (சந்திரசேகரா்) சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றன.

ADVERTISEMENT

தொடா்ந்து சிறப்பு அலங்காரத்தில் வெள்ளிக் குதிரை வாகனத்தில் சந்திரசேகரா் நெல்லையப்பா் கோயிலில் எழுந்தருளினாா். அப்போது பூட்டப்பட்டிருந்த சுவாமி சந்நிதி கதவு பதிகம் பாடி திறக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

ADVERTISEMENT
ADVERTISEMENT