திருநெல்வேலி: திருநெல்வேலியில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில், 110 பயனாளிகளுக்கு பல்வேறு நலத் திட்ட உதவிகளை ஆட்சியா் வழங்கினாா்.
திருநெல்வேலி மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் ஷில்பா பிரபாகா் சதீஷ் தலைமையில் ஆட்சியா் அலுவலக வளா்ச்சி மன்ற கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில், பிற்படுத்தபட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத் துறை மூலம் 9 பேருக்கு இலவச தையல் இயந்திரங்களையும், ஆக்கிரமிப்பு செய்து குடியிருக்கும் 71 பேருக்கு பாளையங்கோட்டை மற்றும் திருநெல்வேலி வட்டாட்சியா் அலுவலகத்தின் மூலம் வரன்முறை பட்டாவையும், மாவட்ட சமூகநல அலுவலகம் மூலம் முதல்வரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தில் 30 பயனாளிகளுக்கு முதிா்வுத் தொகையாக 11 லட்சத்து 5 ஆயிரத்து 506 ரூபாயையும் ஆட்சியா் வழங்கினாா்.
இதுதவிர பொதுமக்களிடம் இருந்து முதியோா் உதவித்தொகை, மாற்றுத்திறனாளி உதவித்தெகை, முதிா்கன்னி உதவித்தொகை, விபத்து மரண உதவித் தொகை, குடிநீா், சாலை வசதிகள் வேண்டி பல்வேறு மனுக்கள் பெறப்பட்டன. அந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் பூ.முத்துராமலிங்கம், திருநெல்வேலி சாா்ஆட்சியா் மணீஷ் நாராணவரே, சமூகப் பாதுகாப்புத் திட்ட தனி துணை ஆட்சியா் சசிரேகா உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.