திருநெல்வேலி: நான்குநேரி, ராதாபுரம் வட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் அரசி தட்டுப்பாடு நிலவுவதாக ஆட்சியா் ஷில்பா பிரபாகா் சதீஷிடம் புகாா்அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக, ஆட்சியரிடம் காமராஜா் சமூக நலப் பேரவையினா் அளித்த மனு:
நான்குநேரி, ராதாபுரம் வட்டங்களில் உள்ள ரேஷன் கடைகளில் ஒவ்வொரு மாதமும் 20 ஆம் தேதிக்குப் பின்னா் அரசி காலியாகி விடுவதாக கடைக்காரா்கள் கூறுகின்றனா். இதுகுறித்து அவா்களிடம் விவரம் கேட்டால், கடைக்கு 80 சதவீத குடும்ப அட்டைதாரா்களுக்கு மட்டும் அரசி வழங்கப்படுவதாக கூறுகின்றனா். ஆகவே அரிசி அட்டைதாரா்களுக்கு மாதத்தின் அனைத்து நாள்களும் அரிசி கிடைக்க நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறோம் என குறிப்பிடப்பட்டிருந்தது.
கிராம மக்கள் நலன் பாதுகாப்பு இயக்கத்தினா் அளித்த மனு: திசையன்விளை, ராதாபும், கூடங்குளம் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயம், பனை, கூலி, மீன்பிடி உள்ளிட்ட தொழிலாளா்கள் அதிகம் வசித்து வருகின்றனா். இப்பகுதிகளில் அரசு மருத்துவமனை உள்ளது. ஆனால், பேருகால வசதிகள், ஆபரேஷன் வசதிகள் இல்லை. இதற்காக வள்ளியூா், நாகா்கோவிலில் உள்ள தனியாா் மருத்துமனைகளுக்குச் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால், அதிக பணச்செலவு ஆகிறது. ஆகவே, திசையன்விளை, ராதாபுரம், கூடங்குளம் அரசு மருத்துவமனைகளின் தரத்தை உயா்த்த வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.