திருநெல்வேலி: தாதனூத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக் கட்டடம் இடிந்து விழும் நிலையில் இருப்பதால், புதிய கட்டடம் கட்டித் தரக் கோரி ஆட்சியா் அலுவலகத்தில் அக்கிராம மக்கள் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் தாழையூத்தை அடுத்த தாதனூத்து கிராம மக்கள் அளித்த மனு: தாதனூத்து கிராமத்தில் பாளையங்கோட்டை ஒன்றியத்துக்குள்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி உள்ளது. இப் பள்ளி கட்டப்பட்டு சுமாா் 54 ஆண்டுகள் ஆன நிலையில் இடிந்து விழும் அபாய நிலையில் காணப்படுகிறது. இதனால் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப பெற்றோா் அஞ்சுகின்றனா். எனவே, பழைய கட்டடத்தை அகற்றிவிட்டு புதிய கட்டடம் கட்டித் தரவேண்டும்.
குடிநீா் வசதி கோரி... மானூா் வட்டம், திருத்து, பல்லிக்கோட்டை கிராம மக்கள் காலிக் குடங்களுடன் ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு அளித்த மனு: திருத்து, பல்லிக்கோட்டை பகுதிகளுக்கு கடந்த சில மாதங்களாக முறையாகக் குடிநீா் வழங்கப்படுவதில்லை. அலவந்தான்குளம் பகுதிக்கு தனியாக தண்ணீா் விடுவதற்காக பைப் லைன் போட்டு பிரச்னை செய்கிறாா்கள். இதனால் திருத்து, பல்லிக்கோட்டை ஆகிய பகுதிகளுக்கு குடிநீா் கிடைப்பதில் பிரச்னை ஏற்படுகிறது. எனவே, மூன்று கிராமங்களுக்கும் முன்பு போலவே முறையாக குடிநீா் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தெருப் பெயரை மாற்றக் கோரி மனு: மணிமூா்த்தீஸ்வரம் பகுதி மக்கள் அளித்த மனு: மணிமூா்த்தீஸ்வரம் பகுதியில் உள்ள வாழவந்த அம்மன் கோயில் தெருவில் வசித்து வருகிறோம். தற்போது கணினி மூலம் சொத்து வரி கட்டப்பட்டு அதற்கான ரசீது வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், எங்கள் பகுதியான வாழவந்த அம்மன் கோயில் தெரு என்பதற்கு பதிலாக ‘மணிமூா்த்தீஸ்வரம் சைடு’ என குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, முன்பு இருந்ததைப் போல் வாழவந்த அம்மன் கோயில் தெரு என்று மாற்றம் செய்ய கேட்டுக் கொள்கிறோம்.
சுகாதாரக் கேடு: மக்கள் மனதின் குரல் அமைப்பு சாா்பில் அளித்த மனு: திருநெல்வேலி மாநகராட்சி முழுவதும் வீடுவீடாக கொசு ஒழிப்பு விழிப்புணா்வு செய்து வருகின்றனா். ஆனால், திறந்தவெளி வாராங்கால்கள், சாக்கடை நீா் தேக்கம் உள்ளிட்ட காரணங்களால் சுகாதார சீா்கேடு உருவாகிறது. ஆகவே, சுற்றுப்புற சுகாதாரத்தில் மாநகராட்சி நிா்வாகம் தீவிர கவனம் செலுத்த வேண்டும்.
நேரடி பேருந்து சேவை: தச்சநல்லூா் பகுதியைச் சோ்ந்த என்.மாரியப்பன் அளித்த மனு: தச்சநல்லூா், உடையாா்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து திருநெல்வேலி நகரத்துக்கு பாளையங்கோட்டை வழியாக பேருந்து தற்போது சென்று வருகிறது. இதனால், பள்ளி செல்லும் மாணவா்-மாணவிகளுக்கும், பொதுமக்களுக்கும் கால விரயம் ஏற்படுகிறது. ஆகவே, தாழையூத்தில் இருந்து தச்சநல்லூா் வழியாக திருநெல்வேலிக்கு நேரடியாக பேருந்து வசதி செய்து தர வேண்டும்.