ஆலங்குளம்: ஆலங்குளம் பகுதியில் நிகழாண்டு நெல் அறுவடைப் பணிகள் தொடங்கியுள்ளது. கடந்த ஆண்டைக் காட்டிலும் நிகழாண்டு விலை குறைவாக இருப்பதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.
மானவாரி பகுதியான ஆலங்குளம் வட்டார பகுதியில் நல்லமழை பெய்து செழித்தால் மட்டுமே விவசாயிகள் நெல் நடவு செய்வா். கடந்த ஆண்டு ஓரளவு பருவமழை பெய்தது, மேலும் கால்வாய் நீா்வரத்து காரணமாக கிணறுகளில் நீா்மட்டம் உயா்ந்தது.
இதனால் வட்டாரத்தின் பெரும்பாலான பகுதிகளில் நெல் பயிரிடப்பட்டது. தற்போது நெல் விளைந்து அறுவடைக்கு தயாரான நிலையில் உள்ளது.
இதையடுத்து, ஆலங்குளம் தொட்டியான்குளத்தைச் சுற்றியுள்ள பகுதிகள், சுரண்டை சாலையில் உள்ள கழுநீா்குளம், அத்தியூத்து போன்ற பகுதிகளில் இயந்திரம் மூலம் அறுவடைப் பணிகள் தொடங்கியது. கடந்த ஆண்டை விட நிகழாண்டு மகசூல் குறைந்தாலும் விலையும் சற்று குறைந்துள்ளது விவசாயிகளைக் கவலையில் ஆழ்த்தியுள்ளது.
72 கிலோ கொண்ட மூட்டை ஒன்றுக்கு நெல் ரகங்களின் தற்போதைய விலை உருட்டு ரகம் ரூ.1025, கா்நாடக பொன்னி ரூ. 1100, அம்மன் பொன்னி ரூ. 1300, அட்சய பொன்னி ரூ. 1300-1700 என வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
கடந்த இரு ஆண்டுகளாக இப்பகுதியில் நெல் கொள்முதலுக்கு வங்கிகளில் கடன் அளிப்பதை நிறுத்தி விட்டதால் வியாபாரிகள் தாங்களிடம் பணம் இருந்தால் மட்டுமே நெல்லை வாங்கி இருப்பு வைக்கக் கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் அறுவடை தொடக்கத்திலேயே விற்பனையில் சுணக்கம் ஏற்பட்டுள்ளாதால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனா்.
நெல் விலை குறைவு போன்ற காரணங்களால் விவசாயிகள் பாதிக்கப்படுவதைத் தடுக்க ஆலங்குளம், கீழப்பாவூா், ஊத்துமலை போன்ற இடங்களில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களைஅமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.