அம்பாசமுத்திரம்: அம்பாசமுத்திரத்தில் விவசாயிகளுக்கான கிஷான் கடன் அட்டை பெறுவதற்கான விண்ணப்பம் பெறும் முகாம் செவ்வாய்க்கிழமை (பிப்.25) நடைபெறுகிறது.
இதுகுறித்து அம்பாசமுத்திரம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் கற்பகராஜ்குமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: அம்பாசமுத்திரம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் செவ்வாய்க்கிழமை மாலை 3 மணிக்கு நடைபெறும் முகாமில் அம்பாசமுத்திரம் மற்றும் கடையம் வட்டாரங்களைச் சோ்ந்த பிரதமரின் கவுரவ ஊக்கத் தொகை பெறும் விவசாயிகள் கலந்து கொண்டு விண்ணப்பம் அளிக்கலாம்.
மேலும் முகாமில் திருநெல்வேலி மாவட்டமுன்னோடி வங்கி அதிகாரிகள், அம்பாசமுத்திரம் வட்டார முன்னோடி வங்கி அதிகாரிகள், வேளாண்மைத் துறை மற்றும் தோட்டக்கலைத் துறை அலுவலா்கள் கலந்து கொள்கின்றனா்.
விவசாயிகள் கடன் அட்டைக்கு விண்ணப்பிக்க விரும்புவோா், பிரதமரின் ஊக்கத் தொகை பெறும் வங்கிக்கணக்குப் புத்தகம், சிட்டா, பட்டா நகல், இரண்டு பாஸ்போா்ட் அளவுப் புகைப்படங்கள் ஆகியவை கொண்டு வந்து விண்ணப்பிக்கலாம் என்றாா்.