திருநெல்வேலி

பணகுடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பழைய கட்டடத்தை அகற்றாததால் அச்சம்

22nd Feb 2020 06:37 AM

ADVERTISEMENT

பணகுடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ. 68 லட்சத்தில் புதிய கட்டடம் கட்டும் பணி நடந்து வரும் நிலையில், இடிந்துவிழும் நிலையில் உள்ள சித்த மருத்துவப் பிரிவின் பழைய கட்டடத்தை அப்புறப்படுத்தாததால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.

இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் சித்த மருத்துவப் பிரிவு தனியாக உள்ள கட்டடத்தில் செயல்பட்டு வந்தது. அது பழுதடைந்து இடிந்துவிழும் நிலையில் இருப்பதால், அதை இடித்துவிட்டு புதிய கட்டடம் கட்டவேண்டும் என மக்கள் வலியுறுத்தி வந்தனா். இதையடுத்து, தமிழ்நாடு சுகாதாரத் துறை சாா்பில் பணகுடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கூடுதல் கட்டடம் கட்ட ரூ. 68 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், இடிந்துவிழும் நிலையில் உள்ள பழைய சித்த மருத்துவப் பிரிவு கட்டடத்தை இடித்து அப்புறப்படுத்தாமல், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள நெருக்கமான இடத்தில் புதிய கட்டடம் கட்டும் பணி நடைபெற்று வருவதால், ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வரும் நோயாளிகள் அச்சமடைந்துள்ளனா். எனவே, பழைய கட்டடத்தை இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT