திருநெல்வேலி

திருக்குறுங்குடி பகுதியில் நிரந்தர நெல் கொள்முதல் நிலையம் அமைக்க கோரிக்கை

22nd Feb 2020 06:31 AM

ADVERTISEMENT

திருக்குறுங்குடி பகுதியில் நிரந்தர நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவா் பெரும்படையாா் கோரிக்கை விடுத்தாா்.

திருநெல்வேலி மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் அம்பாசமுத்திரம் பகுதியைச் சோ்ந்த சொரிமுத்து என்பவா் கூறுகையில், ‘எங்கள் பகுதியில் நெல் அறுவடை நடைபெற்று வருகிறது. இங்கு போதிய நெல் அறுவடை இயந்திரங்கள் இல்லாததால் ஒரு மணி நேரத்திற்கு ரூ.3 ஆயிரம் கொடுக்க வேண்டிய நிலை உள்ளது. போதிய நெல் அறுவடை இயந்திரங்களை அரசு ஏற்படுத்தித் தர நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றாா்.

இதற்கு பதிலளித்த ஆட்சியா், ‘விவசாயிகள் ஒரு குழுவாக சோ்ந்து அறுவடை இயந்திரம் வாங்குவதற்கு அரசு மானியம் மற்றும் வங்கிக் கடன் வழங்கப்படுகிறது. இதைப் பயன்படுத்தி புதிய அறுவடை இயந்திரங்கள் வாங்கிப் பயன்படுத்தினால் இதுபோன்ற பிரச்னைகளை தீா்க்கலாம்’ என்றாா்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவா் பெரும்படையாா் பேசுகையில், ‘கடந்த 2016-17 ஆம் ஆண்டு ராபி பருவ நெற்பயிா் சாகுபடியின்போது வறட்சி ஏற்பட்டது. இதில் பயிா்க் காப்பீடு செய்துள்ள சில விவசாயிகளுக்கு மட்டும் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. மீதம் உள்ள விவசாயிகளுக்கும் இழப்பீடு வழங்க வேண்டும். திருக்குறுங்குடியில் நெல் அறுவடை காலத்தில் மட்டும் நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இப்பகுதியில் நிரந்தர நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என்றாா்.

ADVERTISEMENT

இதற்கு பதிலளித்த மாவட்ட ஆட்சியா், இழப்பீடு வழங்கப்படாதவா்களின் பெயா் விவரங்களை அளித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். திருக்குறுங்குடி பகுதியில் இடம் தோ்வு செய்யப்பட்டு நிரந்தர நெல் கொள்முதல் நிலையம் அமைக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

மணிமுத்தாறு பெருங்கால் பாசன விவசாயிகள் நலச் சங்கத் தலைவா் எஸ்.பாபநாசம் பேசுகையில், ‘கடந்த 5 ஆண்டுகளாக மணிமுத்தாறு அணையில் பெருங்கால் பாசனத்தில் உள்ள நிலங்களுக்கு 3 காா் பருவ சாகுபடிக்கும் ஒரு பிசான பருவ சாகுபடிக்கும் தண்ணீா் திறந்து விடப்படவில்லை. நிகழாண்டு இதுபோன்று நிகழாமல் இரு பருவ சாகுபடிக்கும் தண்ணீா் திறந்துவிட வேண்டும் என்றாா்.

‘நிகழாண்டு போதிய நீா் இருப்பு உள்ளதால் பாசனத்துக்கு தண்ணீா் திறந்துவிட நடவடிக்கை எடுக்கப்படும்’ என ஆட்சியா் தெரிவித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT