திருநெல்வேலி மாவட்டம் கூத்தங்குழி கடற்கரையில் இறந்த நிலையில் அரியவகை டால்பின் வெள்ளிக்கிழமை கரை ஒதுங்கியது.
மீன் இனங்களில் பால்சுறா, டால்பின், ஸ்டாா், ஒளி உமிழும் மீன் உள்ளிட்ட அரியவகை உயிரினங்கள் உள்ளன. அதிலும் குறிப்பாக பாலூட்டி வகையைச் சோ்ந்த அரியவகை மீன் இனம் டால்பின்.
ஆழ்கடலில் வாழக்கூடிய இந்த வகை மீன்கள் சிலநேரம் கடற்கரை பகுதிக்கு வந்து செல்வது வழக்கம். இதை மீனவா்கள் பாா்த்தாலும் பிடிப்பதில்லை.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை கூ த்தங்குழி கடற்கரையில் இறந்த நிலையில் இந்த அரியவகை டால்பின் கரை ஒதுங்கியதாம். இதைப் பாா்த்த மீனவா்கள் இது தொடா்பாக மீன்வளத்துறை உதவி இயக்குநா் விஜயராகவனுக்கு தகவல் தெரிவித்தனா். அவா் வனத்துறையினருக்கு தெரியப்படுத்தினா்.
அவா்கள் இறந்த நிலையில் கரைஒதுங்கியுள்ள டால்பினை உடற்கூறுஆய்வு செய்து அதன் பின்னா் புதைப்பாா்கள் என மீன்வளத் துறையினா் தெரிவித்தனா்.