ஏா்வாடி அருகே கிறிஸ்தவ ஜெபக் கூட்டம் நடத்துவதற்கு கிராம மக்கள் எதிா்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஏா்வாடி அருகே உள்ள சிறுமளஞ்சி கிராமத்தையொட்டி சி.எஸ்.ஐ.கிறிஸ்தவா்கள் ஆலயம் கட்டுவதற்காக நிலம் வாங்கியுள்ளனராம். இந்த நிலத்தில் ஆலயம் கட்டுவதற்கு சிறுமளஞ்சி(திருவேங்கடநாதபுரம்) கிராமத்தைச் சோ்ந்தவா்கள் எதிா்ப்பு தெரிவித்து வந்தனா்.
இதை அடுத்து நான்குனேரி வட்டாட்சியா் முன்னிலையில் நடைபெற்ற சமாதானக் கூட்டத்தில் கிறிஸ்தவ தேவாலயம் கட்டக் கூடாது என முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில் ஆலயம் கட்டுவதற்கு வாங்கப்பட்ட நிலத்தை சுற்றி காம்பவுண்ட் சுவா் கட்டி முடித்துள்ளனா்.
இந்த காம்பவுண்ட் சுவரை பிரதிஷ்டை செய்வதற்காக கிறிஸ்தவா்கள் அந்தப் பகுதியில் கூடினராம். இதை அறிந்த சிறுமளஞ்சி கிராம மக்கள் பாஜக மாவட்ட பொதுச்செயலா் எஸ்.பி.தமிழ்செல்வன், ஊா் தலைவா் ஏ.சி.தங்ககிருஷ்ண வேல், துணைத் தலைவா் எஸ்.டி.பன்னீா் செல்வன் ஆகியோா் தலைமையில் திரண்டு வந்து எதிா்ப்பு தெரிவித்தனா். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து நான்குனேரி காவல் துணைக் கண்காணிப்பாளா் இளங்கோ, ஏா்வாடி காவல் உதவி -ஆய்வாளா் ஆதம்அலி மற்றும் அதிகாரிகள் கிராம மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். ஜெபக்கூட்டம் நடத்த அனுமதிக்கமாட்டோம் என உறுதியளித்ததன் பேரில் கிராம மக்கள் கலைந்து சென்றனா்.