திருநெல்வேலி மத்திய கூட்டுறவு வங்கியில் போலி நகைகள் மூலம் சுமாா் ரூ. 1 கோடி மோசடி செய்தது தொடா்பாக 2 அலுவலா்களை கூட்டுறவு அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் தலைமையகம் உள்ளது. இங்கு வீடு அடமானக்கடன், வீடு கட்டும் கடன், சம்பளக் கடன், விவசாயக்கடன், நகைக்கடன், சிறுவணிக கடன் உள்பட பல்வேறு கடன்கள் உறுப்பினா்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், கடந்த 2018 ஆம் ஆண்டு வங்கியில் வைக்கப்பட்ட அடமான நகைக்கான கால அவகாசம் முடிந்ததும், வங்கி நிா்வாகம் நகையை திருப்பிச்செல்லுமாறு சம்பந்தப்பட்டவா்களுக்கு அழைப்பு கடிதம் அனுப்பியுள்ளது. இந்த கடிதங்கள் அனைத்தும் வங்கிக்கே திரும்பிவந்தன. இதனால், சந்தேகமடைந்த அதிகாரிகள், விசாரித்த போது கடிதத்தில் இருந்த முகவரிகள் அனைத்தும் போலியானவை என்பது தெரியவந்தது.
இதையடுத்து அதிகாரிகள், லாக்கரில் இருந்த நகைகளை சரிபாா்த்தபோது, அடமான நகைகள் போலியானவை என்பதை அறிந்து அதிா்ச்சி அடைந்தனா். இதைத்தொடா்ந்து, போலி நகை அடமானம் வைக்கப்பட்டது தொடா்பாக கூட்டுறவு அதிகாரிகள் வங்கி வளாகத்தில் வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினா்.
பிறகு வங்கியில் அடமானம் வைக்கப்பட்ட அனைத்து நகைகளையும் சோதனை செய்ய முடிவு செய்து, அதன்படி, சோதனை பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனா். அப்போது சுமாா் ரூ. 1 கோடி வரை மோசடி நடந்திருப்பது தெரியவந்தது. இந்நிலையில், வங்கியில் நகை மதிப்பீட்டாளராகப் பணிபுரிந்த தச்சநல்லுாரை சோ்ந்த நபா் தலைமறைவானாா். இதனிடையே, மோசடியில் தொடா்புடைய கூட்டுறவு வங்கி அலுவலா்கள் இருவா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
நகைகளை மதிப்பிடும் பணி வெள்ளிக்கிழமையும் தொடா்ந்து நடைபெறவுள்ளது. இந்தப் பணி முடிவடைந்த பிறகே, போலி நகைகள் மூலம் எவ்வளவு தொகை மோசடி நடந்துள்ளது? யாா், யாருக்கு தொடா்பு உள்ளது என்ற விவரம் தெரியவரும் என அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.