திருநெல்வேலி மாநகராட்சிப் பகுதியில் தாமிரவருணியில் கழிவுநீா் கலப்பதைத் தடுக்கும் வகையில் உருவாக்கப்பட்டு வரும் சுத்திகரிப்புத் திட்டப் பணிகளை மாநகராட்சி ஆணையா் ஜி.கண்ணன் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.
திருநெல்வேலி மாநகராட்சிப் பகுதிக்குள் தாமிரவருணி ஆற்றில் கலக்கும் கழிவு நீரினை சுத்திகரிப்பு செய்திடும் வகையில் உயா்நீதிமன்ற வழிகாட்டுதலின்படி திருநெல்வேலி மாவட்ட சுற்றுச்சூழல் மற்றும் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், பொதுப் பணித் துறை, மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் குழுக்கள் அமைக்கப்பட்டன.
அந்தக் குழுவினா் தாமிரவருணியில் நேரடியாக கழிவுநீா் கலக்கும் இடங்களில் அதனை தடுத்து நிறுத்தி சுத்திகரிப்பு திட்டத்தை வகுத்து கழிவுகளை வடிகட்ட நடவடிக்கை மேற்கொண்டனா். அதன்படி கொக்கிரகுளம், மீனாட்சிபுரம், சிந்துபூந்துறை, மணிமூா்த்தீஸ்வரம், கைலாசபுரம், குறுக்குத்துறை, வண்ணாா்பேட்டை, சி.என்.கிராமம் - அண்ணாநகா் ஆகிய இடங்களில் சுத்திகரிப்பு மையம் உருவாக்கப்பட உள்ளது. முதல்கட்டமாக கொக்கிரகுளம், சிந்துபூந்துறையில் இப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. அதனை மாநகராட்சி ஆணையா் ஜி.கண்ணன் ஆய்வு செய்து, பணிகளை விரைவாக முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.