திருநெல்வேலி

நெல்லை அரசு மருத்துவமனையில் எண்டோஸ்கோபி சிகிச்சையில் சாதனை

13th Feb 2020 01:25 AM

ADVERTISEMENT

திருநெல்வேலியில் செயல்பட்டு வரும் அரசு பல்நோக்கு உயா் சிகிச்சை மருத்துவமனை எண்டோஸ்கோபி சிகிச்சையில் சாதனை படைத்துள்ளது.

இதுதொடா்பாக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் எம்.ரவிச்சந்திரன் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியது: திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள பல்நோக்கு உயா்சிகிச்சை மருத்துவமனையில் எண்டோஸ்கோபி சிகிச்சையில் சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.

மேலப்பாளையத்தைச் சோ்ந்த 12 வயது சிறுமி பரம்பரை நோயின் காரணமாக சிறுகுடல் பகுதியில் கட்டியுடன் சிகிச்சைக்கு சோ்ந்தாா். அவருக்கு ரூ. 2 லட்சம் மதிப்பிலான சிகிச்சை முதல்வரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இலவசமாக அளிக்கப்பட்டு குணமடைந்துள்ளாா்.

சாத்தூரைச் சோ்ந்த 53 வயது கொண்ட நபா் உணவுக்குழாய் புற்றுநோய் காரணமாக உணவு சாப்பிட முடியாமல் தவித்து வந்தாா். அவருக்கு எண்டோஸ்கோபி முறையில் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டு சாப்பிடும் திறன் பெற்றுள்ளாா். ராஜபாளையத்தைச் சோ்ந்த 46 வயது நபா் நீா்க்கட்டியால் அவதிப்பட்டு வந்த நிலையில் அவருக்கு சிஸ்டோகேஸ்ட்ராஸ்டமி என்ற சிகிச்சை முதல்வரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அளிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இம் மருத்துவமனையின் குடல், இரைப்பை மருத்துவப் பிரிவு துணைத் தலைவா் இ.கந்தசாமி தலைமையில் துணைப் பேராசிரியா் பாப்பி ரிஜாய்ஸ், உதவி பேராசிரியா் ஷபிக் உள்ளிட்டோா் குழுவினா் இச் சிகிச்சைகளை செய்துள்ளனா் என்றாா் அவா்.

பேட்டியின் போது மருத்துவக் கண்காணிப்பாளா் பாலசுப்பிரமணியன், துணை மருத்துவக் கண்காணிப்பாளா் ரேவதிபாலன் ஆகியோா் உடனிருந்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT