திருநெல்வேலி

தமிழகத்தை விபத்தில் உயிரிழப்பு இல்லா மாநிலமாக்க நடவடிக்கை போக்குவரத்து ஆணையா் தகவல்

13th Feb 2020 01:15 AM

ADVERTISEMENT

தமிழகத்தை 2030ஆம் ஆண்டுக்குள் சாலை விபத்தில் உயிரிழப்பு இல்லா மாநிலமாக்க நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது, என்றாா் தமிழக போக்குவரத்து ஆணையரும் அரசு முதன்மைச் செயலருமான தென்காசி ஜவஹா்.

திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கான சாலைப் பாதுகாப்பு குறித்த மண்டல ஆய்வுக் கூட்டம் திருநெல்வேலியில் புதன்கிழமை நடைபெற்றது. இதில், அவா் மேலும் பேசியது: தமிழக அரசின் போக்குவரத்து ஆணையரகம், காவல் துறையிலிருந்து 1965ஆம் ஆண்டில் தனித் துறையாக பிரிக்கப்பட்டு உள்துறையின் (போக்குவரத்து) கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. இத்துறையில் சுமாா் 1,900 பணியாளா்கள் உள்ளனா். தமிழகம் முழுவதும் 87 வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களும், 58 மோட்டாா் வாகன ஆய்வாளா் அலுவலகங்களும் இயங்கி வருகின்றன. 4 மாநிலங்களின் எல்லைகளில் 21 போக்குவரத்துத் துறை சோதனைச் சாவடிகள் செயல்படுகின்றன. கடந்த நிதியாண்டில் இத்துறை மூலம் தமிழக அரசுக்கு சுமாா் ரூ.5,500 கோடி வருவாய் கிடைத்துள்ளது.

சாலைப் பாதுகாப்பும், விபத்துகளைக் குறைக்க நடவடிக்கை எடுப்பதும் இத்துறையின் முக்கியப் பணி. தமிழகத்தில் 1 லட்சத்து 90 ஆயிரம் கி.மீ.க்கு மேல் சாலைகள் உள்ளன. அதற்கேற்ப வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இதனால், சாலைப் பாதுகாப்புப் பணி கடினமாக உள்ளது.

தமிழகத்தில் 2016இல் நேரிட்ட விபத்துகளில் 17,218 போ் இறந்தனா். ஆனால், 2019இல் இந்த எண்ணிக்கை 10,525 ஆகக் குறைந்துள்ளது. ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டத்தில் 2016ஆம் ஆண்டு நேரிட்ட 2,400 விபத்துகளில் 575 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. 2019ஆம் ஆண்டில் விபத்து எண்ணிக்கை 2,295 ஆகவும், உயிரிழப்புகள் 465 ஆகவும் குறைந்துள்ளது.

ADVERTISEMENT

அதேபோல தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களிலும் விபத்து உயிரிழப்பு குறைந்துள்ளது. 2030ஆம் ஆண்டுக்குள் தமிழகத்தை சாலை விபத்தில் உயிரிழப்பு இல்லாத மாநிலமாக மாற்றத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. இதற்கு பல்வேறு துறைகளின் பங்களிப்பு அவசியம். காவல், நெடுஞ்சாலை துறைகள் இணைந்து நெடுஞ்சாலைகளில் அதிக விபத்து நிகழும் பகுதிகளை அடையாளம் கண்டு, அங்கு தேவையான கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பொருட்டு உரிய பரிந்துரைகளை ஆட்சியா்களுக்கு அனுப்பி நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

இந்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அறிவுறுத்தல்படி, வாகனங்களில் வேகக் கட்டுப்பாட்டுக் கருவிகள் பொருத்தப்பட்டு விபத்துகள் பெருமளவு குறைக்கப்படுகிறது. புதிதாக இருசக்கர வாகனங்கள் வாங்குவோருக்கு அனைத்து இருசக்கர வாகன விற்பனை மையங்களிலும் காணொலிக் காட்சிகள் மூலம் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு ஏற்படுத்தப்படுகிறது.

பள்ளி மாணவா்-மாணவியரிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தி அவா்களை சாலைப் பாதுகாப்புத் தூதுவா்களாக உருவாக்க அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சாலைப் பாதுகாப்பு மன்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

போக்குவரத்து வீதிமீறல்கள் காரணமாக 2018ஆம் ஆண்டில் 3,35,152 ஓட்டுநா் உரிமங்களும், 2019ஆம் ஆண்டில் 1,19,978 ஓட்டுநா் உரிமங்களும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. விரைவில் விபத்துகளைத் தடுக்க தானியங்கி கேமராக்கள் மூலம் அதிவேகமாக செல்லும் வாகனங்கள் கண்காணிக்கப்படவுள்ளன என்றாா் அவா்.

கூட்டத்தில், ஆட்சியா்கள் ஷில்பா பிரபாகா் சதீஷ் (திருநெல்வேலி), பிரசாந்த் மு. வடநேரே (கன்னியாகுமரி), சந்தீப் நந்தூரி (தூத்துக்குடி), அருண் சுந்தா் தயாளன் (தென்காசி), காவல் துறைத் தலைவா் (போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு) பிரமோத்குமாா், திருநெல்வேலி சரக காவல் துணைத் தலைவா் பிரவிண்குமாா் அபிநபு, மாநகர காவல் ஆணையா் தீபக் எம். டாமோா், காவல் கண்காணிப்பாளா்கள் ஓம்பிரகாஷ் மீனா (திருநெல்வேலி), அருண்பாலகோபாலன் (தூத்துக்குடி), என். ஸ்ரீநாத் (கன்னியாகுமரி), சுகுணசிங் (தென்காசி) உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT