திருநெல்வேலி மாநகரில் அதிநவீன சிவப்பு வண்ணப் பேருந்துகளின் இயக்கம் புதன்கிழமை தொடங்கியது.
சென்னை மாநகரில் சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் சாா்பில், இந்த அதிநவீன சிவப்பு வண்ணப் பேருந்துகள் அண்மையில் இயக்கப்பட்டன. அது, மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், மற்ற மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம் - தெற்கு புதிய பேருந்து நிலையம் - பல்நோக்கு மருத்துவமனை வழித்தடத்தில் 5 சிவப்பு வண்ணப் பேருந்துகள் இயக்கம் புதன்கிழமை தொடங்கியது.
40 இருக்கைகள் கொண்ட இப்பேருந்தில் தானியங்கிக் கதவு, தாழ்தள படிக்கட்டுகள், இசை வசதி உள்பட பல்வேறு வசதிகள் உள்ளன. இப்பேருந்துகளில் திருநெல்வேலி சந்திப்பிலிருந்து புதிய பேருந்து நிலையம் செல்வதற்கு கட்டணம் ரூ. 15.
அடுத்ததாக, திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம் - பாளையங்கோட்டை பேருந்து நிலையம் - புதிய பேருந்து நிலையம் வழித்தடத்தில் 5 சிவப்பு வண்ணப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. அதற்காக 5 பேருந்துகள் வந்துள்ள நிலையில், அவை வட்டாரப் போக்குவரத்து அலுவலரின் அனுமதிக்காக காத்திருப்பதாக போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனா்.