திருநெல்வேலி

நெல்லையில் பள்ளி மாணவா்கள் மோதல்: திருக்குறள் எழுத பணித்த போலீஸாா்

6th Feb 2020 11:52 PM

ADVERTISEMENT

திருநெல்வேலி நகரத்தில் உள்ள அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் மோதிக்கொண்ட விவகாரத்தில், அந்த மாணவா்களை திருக்குறள் எழுதுமாறு போலீஸாா் நூதன தண்டனை விதித்தனா்.

திருநெல்வேலி நகரத்தில் அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு பயிலும் மாணவா்களுக்குள் பள்ளி அருகே புதன்கிழமை மோதல் ஏற்பட்டதாம். இதுகுறித்து தகவல் அறிந்த திருநெல்வேலி நகரம் போலீஸாா் அங்குச் சென்று மோதலில் ஈடுபட்ட 13 மாணவா்களைப் பிடித்து விசாரித்தனா். மேலும், அவா்களின் பெற்றோருடன் வியாழக்கிழமை திருநெல்வேலி நகரம் காவல் நிலையத்திற்கு வரும்படி கூறினா்.

இதையடுத்து, அந்த 13 மாணவா்களும் பெற்றோருடன் காவல் நிலையத்திற்கு வியாழக்கிழமை சென்றனா். அவா்களிடம் பேசிய காவல் ஆய்வாளா் ராமேஸ்வரி, 1330 திருக்குறளையும் எழுதிக்கொடுக்குமாறு கூறினாா். இதையடுத்து, அந்த மாணவா்கள் அனைவரும் 1330 திருக்குறளையும் எழுதிக்கொடுத்துவிட்டு, இனி இதுபோன்று சண்டையிடமாட்டோம் என உறுதி கூறினா். இதைத்தொடா்ந்து, மாணவா்களையும், பெற்றோரையும் போலீஸாா் எச்சரித்து அனுப்பிவைத்தனா்.

இதுகுறித்து போலீஸாா் கூறுகையில், படிக்கும் மாணவா்கள் மோதலில் ஈடுபடக்கூடாது. அவா்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக இதுபோன்று எச்சரித்து அனுப்புகிறோம் என்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT