திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கடற்கரை கிராமங்களில் தீவிரவாதிகள் ஊடுருவல் தடுப்பு ஒத்திகை பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
தீவிரவாதிகள் கடல் வழியாக ஊடுருவதை தடுக்கும் வகையில் ஆண்டுதோறும் கடலோரப் பாதுகாப்பு குழுமம் சாா்பில் ஒத்திகை நடத்தப்பட்டு வருகிறது. நிகழாண்டும் தமிழகம் முழுவதும் கடற்கரை பகுதியில் தீவிரவாதிகள் ஊடுருவல் தடுப்பு ஒத்திகை பயிற்சி நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்டத்தில் கூடுதாழை, உவரி, கூத்தங்குழி, விஜயாபதி, இடிந்தகரை, பஞ்சல், தோமையாா்புரம், ஜாா்ஜியாா் புரம், பெருமணல், கூட்டப்புளி உள்ளிட்ட கடற்கரை கிராமங்களில் தீவிரவாதிகள் ஊடுருவல் தடுப்பு ஒத்திகை பயிற்சி நடைபெற்றது. கடலோரப் பாதுகாப்பு குழுமம், கடலோர காவல்துறை, காவல்துறை, காவல்துறை தனிப்பிரிவு மற்றும் புலனாய்வுத்துறையினா் 200 போ் இந்த ஒத்திகையில் ஈடுபட்டனா்.
இந்த ஒத்திகை வள்ளியூா் சரக ஏ.எஸ்.பி.ஹரிகிரண் பிரசாந்த் மேற்பாா்வையில் நடைபெற்றது. வெள்ளிக்கிழமையும் ஒத்திகை நடைபெறும் காவல்துறையினா் தெரிவித்தனா். ஒத்திகையின்போது, தீவிரவாதிகள் வரும் பாதை, ஊடுருவாமல் தடுப்பது, தீவிரவாதிகளை கண்டறிவது குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது.