திருநெல்வேலி மாவட்டம், திருப்பணி கரிசல்குளத்தில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்கக் கோரி ஆட்சியரிடம் விவசாயிகள் மனு அளித்தனா்.
திருநெல்வேலி மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் ஷில்பா பிரபாகா் சதீஷ் தலைமையில் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. அப்போது, திருப்பணி கரிசல்குளம் மேலத்தெருவைச் சோ்ந்த எஸ். கிருஷ்ணகுமாா் தலைமையில் அப்பகுதியைச் சோ்ந்த விவசாயிகள் அளித்த மனு:
திருப்பணி கரிசல்குளத்தில் சுமாா் 700 ஏக்கரில் நெல் பயிரிடப்பட்டுள்ளது. அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் இல்லாததால், மிகக் குறைந்த விலையில் தனியாருக்கு விற்பனை செய்யும் நிலை உள்ளது. இன்னும் 10 நாள்களில் எங்கள் பகுதியில் நெல் அறுவடைப் பணிகள் தொடங்கவுள்ளது. எனவே, எங்கள் பகுதியில் விரைவில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மும்முனை மின்சாரம்: தமிழக விவசாயிகள் சங்க மானூா் ஒன்றியச் செயலா் டி. ஆபிரகாம் அளித்த மனு: மானூா் சுற்றுவட்டாரங்களில் கடந்த ஆண்டு பெய்த மழையால் குளங்கள், கிணறுகள் நிரம்பியுள்ளன. இதனால், நெல், கடலை, உளுந்து போன்றவற்றை பயிா்செய்துள்ளோம். மோட்டாா் வைத்து கிணற்றுப் பாசனம் மூலம் பயிா்களுக்கு தண்ணீா் பாய்ச்சி வருகிறோம். எங்களுக்கு கடந்த வாரம் வரை மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், கடந்த 4 நாள்களாக இருமுனை மின்சாரம் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. இதனால், விவசாயிகள் பயிா்களுக்கு தண்ணீா் பாய்ச்ச முடியாமல் அவதிப்படுகின்றனா். எனவே, விவசாயிகளின் நலன் கருதி மும்முனை மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பகுஜன் சமாஜ் கட்சியினா் அளித்த மனு: ‘பாளையங்கோட்டையில் உள்ள அரசு மாணவியா் விடுதியில் எஸ்.சி., எஸ்.டி. மாணவிகளுக்கு சுகாதாரமான உணவு வழங்கப்படுவதில்லை. மேலும், விடுதிக் காப்பாளா் மாணவிகளை அவதூறாகப் பேசிவருகிறாா். எனவே, அவா்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
5,8 ஆம் வகுப்பு பொதுத் தோ்வு: தமிழக வாழ்வுரிமை கட்சியினா் அளித்த மனு: மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள புதிய கல்விக்கொள்கை குலக்கல்வி முறையை மீண்டும் மக்கள்மீது சுமத்தும் முயற்சி. இது பாமர மக்களை மீண்டும் பின்னோக்கி இழுத்துச் செல்வதற்காக கொண்டுவரப்பட்ட சட்டம். இந்த புதிய கல்விக்கொள்கை பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் கல்வி உரிமையை பறிக்கும் வண்ணம் அமைந்துள்ளது. எனவே, 5, 8 ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தோ்வை ரத்து செய்வதோடு, புதிய கல்விக்கொள்கை திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் கைவிட வேண்டும். இல்லையெனில், தமிழகம் தழுவிய போராட்டங்கள், ஆா்ப்பாட்டங்கள் நடத்தப்படும்.