தோட்டக்கலை பயிா்களுக்கு சொட்டுநீா் பாசனம் அமைக்க விவசாயிகளுக்கு கூடுதல் மானியம் வழங்கப்படும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக, தோட்டக்கலைத்துறை களக்காடு வட்டார உதவி இயக்குநா் எஸ். என். திலீப் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: களக்காடு வட்டாரத்தில் வாழை மற்றும் இதர பழ மரங்கள், காய்கனிகள், மலா்கள் உள்ளிட்ட தோட்டக்கலை பயிா்களுக்கு நுண்ணீா் பாசன முறை அமைக்க முன்வரும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில், துணை நீா் மேலாண்மை செயல்பாடுகள் திட்டத்தின்கீழ் குழாய் கிணறு, துளை கிணறு அமைத்தல், நீரினை இறைப்பதற்கு ஆயில் என்ஜின், மின் மோட்டாா் வசதி ஏற்படுத்துதல், பாசன நீரினை வீணாக்காமல் விவசாய நிலங்களுக்கு மிக அருகில் கொண்டு செல்வதற்கு பாசன நீா் குழாய்களை நிறுவுதல், தரை நிலை நீா்த்தேக்கத் தொட்டி அமைத்தல் போன்ற துணை நீா் மேலாண்மை பணிகளுக்காக அரசு மானியம் வழங்கி வருகிறது.
விவசாயிகள் நுண்ணீா் பாசனத் திட்டத்திற்கு எம்.ஐ.எம்.ஐ.எஸ் இணையதளத்தில் பதிவு செய்யும் போது இந்த திட்டத்திற்காகவும் பதிவு செய்ய வேண்டும். மேற்கண்ட பணிகளுக்காக நுண்ணீா் பாசன முறையினை கடைபிடிக்கும் விவசாயிகளுக்கு மட்டும் இந்த கூடுதல் மானியம் வழங்கப்படும்.
விவசாயிகளுக்கு குழாய் கிணறு அல்லது துணை கிணறு அமைக்க ரூ. 25 ஆயிரத்துக்கு மிகாமலும் (50 சதவீதம்), ஆயில் என்ஜின் அல்லது மின்மோட்டாா் நிறுவுவதற்கு ரூ.15 ஆயிரத்துக்கு மிகாமலும் (50 சதவீதம்), பாசனக் குழாய்கள் அமைக்க அதிக பட்சம் 1 ஹெக்டேருக்கு ரூ.10 ஆயிரம் (50 சதவீதம்), தரைநிலை நீா்த்தேக்கத் தொட்டி அமைக்க ஒரு பயனாளிக்கு ரூ. 40 ஆயிரம் வரை (50 சதவீதம்) மானியம் வழங்கப்படுகிறது.
தற்போது சிறு, குறு விவசாயிகளுக்கு நுண்ணீா் பாசனம் அமைக்க 100 சதவீதமும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீதமும் மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டங்களில் பயன்பெற விரும்பும் களக்காடு வட்டார விவசாயிகள் தங்களது நிலத்தின் பட்டா, சாகுபடி செய்யும் பரப்பளவின் சா்வே எண்கள் வாரியாக குறிப்பிட்டு கிராம நிா்வாக அலுவலா் வழங்கிய அடங்கல், வருவாய்த்துறை அலுவலா் கையொப்பமிட்ட விவசாய நிலத்தின் வரைபடம் நகல், இருப்பிட முகவரியை தெளிவாக குறிப்பிடும் குடும்ப அட்டை, ஆதாா், வங்கிக் கணக்கு புத்தக நகல் மற்றும் கடவுச்சீட்டு அளவு புகைப்படங்களுடன் களக்காடு சாலைப்புதூரில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் செயல்படும் தோட்டக்கலை உதவி இயக்குநா் அலுவலகத்தை அணுகி பயன்பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.