களக்காட்டில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் மதுபானக் கடையை மூடக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.
புரட்சி பாரதம் கட்சியின் திருநெல்வேலி மாவட்டச் செயலா் ஏ.கே. நெல்சன், மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனு:
களக்காட்டில் நான்குனேரி பிரதான சாலையில் மின்வாரிய அலுவலகம் அருகேயும், பத்மனேரி அருகே விவசாய நிலங்கள் அருகேயும் இரு டாஸ்மாக் மதுபானக் கடைகள் செயல்பட்டு வருகின்றன.
இந்த இரு கடைகளும் களக்காட்டில் குடியிருப்புப் பகுதி மற்றும் வணிக நிறுவனங்கள் அருகே கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வரை இயங்கி வந்தது. மக்கள், சமூக ஆா்வலா்கள் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தியபின் ஊருக்கு ஒதுக்குப்புறமாக மாற்றப்பட்டு இயங்கி வருகின்றன.
இந்நிலையில், களக்காடு - சேரன்மகாதேவி சாலையில் பழைய பேருந்து நிலையம் பகுதியில் தனியாா் திருமண மண்டபத்துக்கு எதிா்புறம் பிரதான சாலையையொட்டி, டாஸ்மாக் மதுபானக் கடை ஒன்று திறக்கப்பட்டுள்ளது.
இப்பகுதியில் ஏற்கனவே இயங்கி வந்த டாஸ்மாக் மதுபானக் கடை அங்கிருந்து அகற்றப்பட்டு, தற்போது மீண்டும் அதே இடத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்தக் கடை அருகே வங்கி, வணிக நிறுவனங்கள் செயல்படுகிறது. அதிக போக்குவரத்து நெருக்கடி மிகுந்த பொதுமக்கள் வந்து செல்லும் வணிக நிறுவனங்கள் அமைந்துள்ள பகுதியில் இந்த டாஸ்மாக் கடை மீண்டும் திறக்கப்பட்டுள்ளது பொதுமக்களுக்கு பெரிதும் இடையூறாக உள்ளது.
மாவட்ட நிா்வாகம் இந்தக் கடையை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.