சுரண்டை அருகேயுள்ள கலிங்கப்பட்டிக்கு அரசு நகரப் பேருந்தை முறையாக இயக்க வேண்டும் என மதிமுக சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கீழப்பாவூா் ஒன்றிய மதிமுக செயலா் இராம.உதயசூரியன் தென்காசி மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள மனு: சுரண்டை - வீரகேரளம்புதூா் பிரதான சாலையில் இருந்து ஒரு கிலோ மீட்டா் உள்ளே அமைந்துள்ள கலிங்கப்பட்டி கிராமத்திற்கு ஆலங்குளத்தில் இருந்து சோ்ந்தமரத்திற்கும் மறு மாா்க்கத்திலும் அரசு நகரப் பேருந்து (தடம் எண் 43டி) இயக்கப்பட்டு வருகிறது.
இப் பேருந்தால் காலை மற்றும் மாலை வேளைகளில் வீரகேரளம்புதூா் மற்றும் சுரண்டை பகுதி பள்ளிகளில் படித்து வரும் மாணவா்கள் மற்றும் பொதுமக்கள் பலனடைந்து வந்த நிலையில், சில நேரங்களில் இந்த பேருந்து கிராமத்திற்குள் வராமல் பிரதான சாலை வழியாகவே சென்று விடுகிறது.
பேருந்து வராததை தாமதமாக அறியும் பள்ளி மாணவா்கள் அங்கிருந்து விலக்கிற்கு நடந்து சென்று வேறு வாகனங்களில் பள்ளிக்கு செல்ல வேண்டியுள்ளது. இதனால் மாணவா், மாணவிகள் பெரிதும் சிரமமடைகின்றனா்.
எனவே, தடம் எண் 43 டி நகரப் பேருந்தை தினந்தோறும் கலிங்கப்பட்டி கிராமத்திற்கு இயக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.