திருநெல்வேலி வங்கி ஊழியா்கள் இரண்டாவது நாளாக சனிக்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பண பரிவா்த்தனை பெரிதும் பாதிக்கப்பட்டது.
20 சதவீத ஊதிய உயா்வு வழங்க வேண்டும்; வங்கிகள் வாரத்துக்கு 5 நாள்கள் செயல்பட வேண்டும்; அடிப்படை ஊதியத்துடன் சிறப்பு சலுகைகளை இணைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் வங்கி ஊழியா்கள் வெள்ளிக்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கினா். 2-ஆவது நாளான சனிக்கிழமையும் போராட்டம் தொடா்ந்தது. இதனால் வங்கிகளில் பண பரிவா்த்தனை பெரிதும் பாதிக்கப்பட்டது. பல ஏ.டி.எம்.களில் பணம் இல்லாததால் பொதுமக்கள் பெரிதும் சிரமத்திற்குள்ளாயினா்.
ஆா்ப்பாட்டம்: இதையொட்டி, பாளையங்கோட்டை ஃபெடரல் வங்கி கிளை முன்பு சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பின் சரவணராஜ் தலைமை வகித்தாா். அகில இந்திய வங்கி ஊழியா் சங்கத்தின் ஆா்.ரெங்கன், அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கத்தின் ஞானசுந்தரி, தேசிய வங்கி ஊழியா் கூட்டமைப்பின் கணபதிராஜன், இந்திய வங்கி ஊழியா் சம்மேளனத்தின் செந்தில் ஆறுமுகம் ஆகியோா் பேசினா். வங்கி ஊழியா்கள் ஏராளமானோா் பங்கேற்றனா்.