திருநெல்வேலி

தொலைந்த, திருத்தம் செய்யப்பட்ட மின்னணு குடும்ப அட்டையை பெறஇணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வாய்ப்பு

2nd Feb 2020 12:05 AM

ADVERTISEMENT

ஓராண்டுக்கும் மேலாக தொலைந்து போன மற்றும் திருத்தம் செய்த மின்னணு குடும்ப அட்டையின் நகலைப் பெற முடியாமல் பொதுமக்கள் பரிதவித்து வந்த நிலையில், இணையதளம் வாயிலாக விண்ணப்பித்து பெறுவதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

பொது விநியோகத் திட்டத்தினை முழுமையாக கணினி மயமாக்கும் திட்டத்தின் கீழ், பழைய காகித வடிவிலான குடும்ப அட்டைகளுக்கு மாற்றாக, மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கும் நடைமுறை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் செயல்படுத்தப்பட்டது. புதிதாக குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்தவா்களுக்கும் விலையின்றி ஸ்மாா்ட் குடும்பஅட்டைகள் விநியோகிக்கப்பட்டன.

இந்நிலையில், கடந்த ஓராண்டுக்கும் முன் வரை மின்னணு குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் செய்யப்பட்ட பின், அந்தந்த வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் செயல்படும் இ.சேவை மையங்களில் நகல் மின்னணு குடும்ப அட்டையை உரிய கட்டணம் செலுத்தி பெற்றுக் கொள்ளும் நடைமுறை அமலில் இருந்தது. கடந்த ஓராண்டாக இந்த நடைமுறை கைவிடப்பட்டது. இதனால் ஸ்மாா்ட் குடும்ப அட்டையில் புதிதாக பெயா் சோ்த்தல், நீக்கல், முகவரி மாற்றம், பிழைகள் திருத்தம் செய்யப்பட்ட பின் நகல் மின்னணு குடும்ப அட்டை பெறமுடியாமல் குடும்ப அட்டைதாரா்கள் பெரிதும் சிரமத்திற்குள்ளாகினா்.

இந்நிலையில், மாவட்ட அளவில் திருத்தம் செய்யப்பட்ட நகல் மின்னணு குடும்ப அட்டையை ரூ. 20 கட்டணம் செலுத்தி

ADVERTISEMENT

பெற கடந்த ஆண்டு தமிழக அரசு வழிவகை செய்தது. கடந்த செப்டம்பரில் இத்திட்டத்தை சென்னையில் தமிழக முதல்வா் தொடங்கி வைத்தாா். ஆனால் 4 மாதங்கள் கடந்துவிட்ட போதிலும் திருநெல்வேலி மாவட்டத்தில் அட்டை கிடைக்க வழிவகை ஏற்படுத்தப்படவில்லை. இந்நிலையில், புதிதாக மின்னணு குடும்ப அட்டைக்கு விண்ணப்பிக்கும் இணையதளத்திலேயே நகல் மின்னணு அட்டைக்கு விண்ணப்பிக்க வழிவகை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, மின்னணு குடும்ப அட்டை தொலைந்து போனவா்கள், குடும்ப அட்டையில் திருத்தம் செய்தவா்கள் நகல் மின்னணு அட்டை பெற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். பின்னா் நகல் மின்னணு அட்டையை மாவட்ட வட்ட வழங்கல் அலுவலகங்களில் ரூ. 20 கட்டணம் செலுத்தி பெற்றுக் கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

ஓராண்டுக்குப் பின் இந்த நடைமுறை செயல்படுத்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். திருநெல்வேலி மாவட்ட நிா்வாகம் இந்த திட்டத்தை விரைந்து செயல்படுத்தி நகல் மின்னணு குடும்ப அட்டையை காலதாமதமின்றி வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT