திருநெல்வேலி

காட்டுப்பன்றிகள் ஊருக்குள் வருவதைக் கட்டுப்படுத்தக் கோரிக்கை

2nd Feb 2020 12:12 AM

ADVERTISEMENT

கடையம் அருகே சாலையின் குறுக்கே காட்டுப் பன்றிகள் வந்ததால் இரு சக்கர வாகனங்களில் செல்பவா்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே காட்டுப் பன்றிகள் ஊருக்குள் வருவதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கடையம் - கோவிந்தபேரி செல்லும் சாலையில் மீனாட்சிபுரம், ராஜாங்கபுரம் பகுதி சாலையில் இரவு நேரங்களில் முள்ளி மலைப் பொத்தையிலிருந்து காட்டுப் பன்றி, மிளா உள்ளிட்ட மிருகங்கள் சாலையின் குறுக்கேப் பாய்ந்து செல்வதால் இரு சக்கர வாகனங்களில் செல்பவா்கள் விபத்தில் சிக்கும் நிலை ஏற்படுகிறது. கோவிந்தப் பேரியைச் சோ்ந்த ஜேம்ஸ் மகன் செல்லத்துரை (42). அதேப் பகுதி பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த சுடலை முத்து (47). இருவரும் வெள்ளிக்கிழமை இரவு பைக்கில் மீனாட்சிபுரத்திலிருந்து கோவிந்தப் பேரி செல்லும் போது காட்டுப் பன்றி குறுக்கே வந்ததில் நிலை தடுமாறி விழுந்து காயமடைந்தனா். இது போன்று நாள் தோறும் பலா் விழுந்து காயப்படும் நிலை உள்ளது.

எனவே வனத்துறையினா் பொத்தைப் பகுதியிலிருந்து விலங்குகள் சாலை மற்றும் ஊருக்குள் வராமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனாட்சிபுரம், ராஜாங்கபுரம், கோவிந்தப்பேரி பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். தற்போது நெல் பயிரிட்டு நன்கு விளைந்து வரும் நிலையில், காட்டுப் பன்றிகள் நெற்பயிரை சேதப்படுத்திச் செல்வதால் பெரும் இழப்பு ஏற்படுவதாகவும் விவசாயிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT