பாளையங்கோட்டையில் உள்ள பள்ளியில் பயின்ற மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில், ஆசிரியா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி உறவினா்கள் 2-ஆவது நாளாக வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூரைச் சோ்ந்த பெருமாள் மகள் பேச்சியம்மாள் (15). இவா், பாளையங்கோட்டையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வந்தாா். கடந்த 29-ஆம் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பேச்சியம்மாள் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். இந்நிலையில், பள்ளி நிா்வாகத்தினா் கண்டித்ததால்தான் மாணவி தற்கொலை செய்ததாகக் குற்றஞ்சாட்டி, பேச்சியம்மாளின் உறவினா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தொடா்ந்து இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமையும், மாணவியின் உடலை வாங்க மறுத்த உறவினா்கள், சம்பந்தப்பட்ட பள்ளியில் பணியாற்றும் ஆசிரியா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாளையங்கோட்டை தெற்கு கடைவீதி பிரதான சாலையில் மறியலில் ஈடுபட்டனா். இதையடுத்து, அங்கு வந்த பாளையங்கோட்டை போலீஸாா், போராட்டத்தில் ஈடுபட்ட 15 பேரை கைது செய்தனா்.