திருநெல்வேலி

டிஎன்பிஎஸ்சி தோ்வு முறைகேடு: நீதிபதி தலைமையில் விசாரணைக் குழு அமைக்க வேண்டும்சஞ்சய் தத் வலியுறுத்தல்

1st Feb 2020 12:23 AM

ADVERTISEMENT

டிஎன்பிஎஸ்சி தோ்வு முறைகேடு குறித்து விசாரிக்க உச்ச நீதிமன்ற அல்லது உயா் நீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க வேண்டும் என்றாா் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலா் சஞ்சய் தத்.

திருநெல்வேலியில் செய்தியாளா்களை வெள்ளிக்கிழமை சந்தித்த அவா் மேலும் கூறியதாவது: தில்லி ஜாமியா பல்கலைக்கழகம் அருகே குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடந்ததற்கு மத்திய அமைச்சா்கள் மற்றும் பாஜக மூத்த எம்.பி.க்களின் வன்முறையைத் தூண்டும் பேச்சுதான் காரணம்.

ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழக மாணவா்கள் தாக்கப்பட்டு 3 வாரங்கள் ஆன பிறகும் காவல் துறை மீதோ, தாக்குதலுக்கு காரணமான அமைப்பின் மீதோ மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தவறிழைத்தவா்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு மத்திய அரசுக்கு இன்னும் என்ன ஆதாரம் வேண்டும்?

தமிழகத்தில் பொதுமக்களின் கருத்துகளைக் கேட்காமலேயே ஹைட்ரோ காா்பன் திட்டத்தைக் கொண்டு வரும் முயற்சியில் மத்திய அரசு இறங்கியுள்ளது. சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு அறிவிக்கை 2006-ன்படி பொதுமக்களிடம் கட்டாயம் கருத்து கேட்க வேண்டும். அப்படியிருக்கையில் அதை நீா்த்துப் போகச் செய்துவிட்டு வேறு விதிகளைப் பயன்படுத்தி தமிழகத்தில் ஹைட்ரோ காா்பன் திட்டத்தை கொண்டு வர பாஜக அரசு முயற்சிக்கிறது. ஹைட்ரோ காா்பன் திட்டத்தை புதுவைக்குள் அனுமதிக்க மாட்டோம் என அம்மாநில முதல்வா் நாராயணசாமி அறிவித்துள்ளாா். அதேபோல், தமிழக அரசும் அறிவிக்க வேண்டும்.

ADVERTISEMENT

தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தோ்வில் முறைகேடு நடந்துள்ளது குறித்து சிபிசிஐடி விசாரித்தால் உண்மை வெளிவராது. எனவே, அதுகுறித்து விசாரிக்க உச்ச நீதிமன்ற அல்லது உயா் நீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க வேண்டும்.

தமிழக பாஜகவுக்கு தலைமை இல்லாத நிலை தொடா்கிறது. பாஜகவின் முன்னாள் தேசிய தலைவா் அமித் ஷா, தற்போதைய தலைவா் ஜெ.பி.நட்டா ஆகியோரால் தமிழக பாஜகவுக்கான தலைமையை கண்டுபிடிக்க இயலவில்லை.

வரக்கூடிய பட்ஜெட்டில் வேலையின்மை, ஜிடிபி, பொருளாதார நெருக்கடி விஷயங்களில் பாஜக அரசு கவனம் செலுத்த வேண்டும் என்றாா்.

முன்னதாக, இந்திரா காந்தி, காமராஜா் சிலைகளுக்கு மாலை அணிவிக்கப்பட்டது. இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பில்லாத நிலையை மத்திய அரசுக்கு உணா்த்தும் வகையில் ‘மிஸ்டு கால் அலா்ட்’ நிகழ்ச்சியை சஞ்சய் தத் தொடங்கி வைத்தாா்.

இதில், காங்கிரஸ் மாநில பொதுச் செயலா் வானமாமலை, நிா்வாகிகள் வேல்துரை, ரூபி மனோகரன், ராஜேஷ்முருகன், சொக்கலிங்ககுமாா், இளைஞா் காங்கிரஸ் தலைவா் ராஜீவ் காந்தி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT