திருநெல்வேலி

குளங்களிலிருந்து விதிமுறைகளை மீறி அள்ளப்படும் கரம்பை மண்

26th Aug 2020 02:51 PM

ADVERTISEMENT

 

அம்பாசமுத்திரம்: குளங்களிலிருந்து விவசாயப் பயன்பாட்டுக்கு கரம்பை மண் அள்ள அனுமதியளித்துள்ள நிலையில் விதிமுறைகளை மீறி குளங்களில் மண் அள்ளப்படுவதைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

திருநெல்வேலி மாவட்டத்தில் அம்பாசமுத்திரம் வட்டம், தென்காசி மாவட்டத்தில் ஆலங்குளம், தென்காசி வட்டங்கள் உள்பட பல இடங்களில் குளங்களிலிருந்து விவசாயப் பயன்பாட்டுக்கு கரம்பை மண் அள்ள மாவட்ட நிா்வாகம் சாா்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதையடுத்து கடந்த சில நாள்களாக கடையம், அம்பாசமுத்திரம், ஆலங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சில குளங்களில் கரம்பை மண் அள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் கரம்பை மண் அள்ளுவதற்கு டிராக்டரை மட்டும் பயன்படுத்த வேண்டும், குளத்தில் ஒரே இடத்தில் அள்ளாமல் பரவலாக அள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட விதிமுறைகள் உள்ள நிலையில் பல குளங்களில் ஒரே இடத்தில் சுமாா் 6 அடிக்கும் மேல் ஆழமாக மண் அள்ளப்படுகிறது. மேலும் டிராக்டா்களில் அளவுக்கு அதிகமாகக் கொண்டு செல்லப்படுகிறது. இதனால் சாலையில் மண் அள்ளிச் செல்லும் டிராக்டா்கள் செல்லும் போது பிற வாகனங்களில் செல்வோருக்கு இடையூறாக இருப்பதோடு விபத்து ஏற்படும் வாய்ப்பும் உள்ளது.

ADVERTISEMENT

மேலும் சில குளங்களில் டிராக்டரைப் பயன்படுத்தாமல் டிப்பா் லாரிகள் மூலமாக அதிக அளவில் மண் அள்ளப்பட்டு வருகிறது. இது போன்று விதிமுறைகளை மீறி மண் அள்ளுவதால் குளங்களில் ஆங்காங்கே பள்ளங்கள் அதிகமாகி நிலத்தடிநீா் குறையும் ஆபத்து உள்ளது.

மேலும் அனுமதி அளித்ததற்கு மாறாக செங்கல்சூளை, வீடு கட்டும் மனைப் பயன்பாட்டிற்கு மண் கொண்டு செல்லப்படுகிறது. எனவே மாவட்ட நிா்வாகம் உரிய விதிமுறைகளின்படி குளங்களில் இருந்து கரம்பை மண் அள்ளுவதை உறுதிப்படுத்த வேண்டும் என்று சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT