பாளையங்கோட்டை மகாராஜநகரில் கொலை செய்யப்பட்ட 2 திருநங்கைள் உள்பட 3 பேர் கொலை வழக்கில் கைதான மூன்றுபேரில் ரிஷிகேஷுக்கு மீண்டும் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
திருநெல்வேலி அருகேயுள்ள நரசிங்கநல்லூர் பகுதியில் வசித்துவந்த முருகன் (28), திருநங்கைகள் பவானி (30), அனுஷ்கா (29) ஆகியோர் கடந்த சில நாள்களாக அடுத்தடுத்து மாயமாகினர். அவர்களை மீட்டுத் தரக் கோரி, திருநங்கைகள் சுத்தமல்லி காவல் நிலையத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனர். மேலும், அவர்கள் அளித்த தகவலின் பேரில் ரிஷிகேஷ், ஸ்நோவின், செல்லத்துரை ஆகிய 3 பேரை காவல்துறையினர் பிடித்து விசாரித்தனர்.
இதில், பவானி, அனுஷ்கா, முருகன் ஆகியோர் கொல்லப்பட்டதும், உடல்கள் பாளையங்கோட்டை கக்கன்நகர் பகுதியில் உள்ள மதுரை-கன்னியாகுமரி நான்குவழிச் சாலை அருகேயுள்ள பாழடைந்த கிணற்றில் வீசப்பட்டதும் தெரியவந்தது. சடலங்களை காவல்துறையினர் மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
இதையடுத்து இந்த கொலையில் தொடர்புடைய ரிஷிகேஷ், ஸ்நோவின், செல்லத்துரை ஆகிய மூன்றுபேரையும் காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர் அவர்கள் மூன்றுபேரும், திருநெல்வேலி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டனர். இவர்களுக்கு சனிக்கிழமை மருத்துவ பரிசோதனை முடிவுற்றது.
இந்நிலையில், ரிஷிகேஷ் என்பவர் திருநங்கையாக இருக்கலாம் என சந்தேகம் எழுந்ததையடுத்து, அவருக்கு மீண்டும் ஞாயிற்றுக்கிழமை மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. இந்த முடிவுகள் திங்கள்கிழமை வெளியாகும் எனவும், அதன்பின்னரே அவர்கள் மூன்று பேரையும் சிறையில் அடைப்பது தொடர்பாக முடிவு எடுக்கப்படும் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.