கரோனாவை காரணம் காட்டி மக்கள் பணி புறக்கணிக்கப்படுவதாக சமூக ஆா்வலா் டிராபிக் ராமசாமி தெரிவித்தாா்.
திருநெல்வேலியில் செய்தியாளா்களைச் சந்தித்த அவா் மேலும் கூறியதாவது: திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு மக்கள் பணிகளில் உள்ள குறைகள் குறித்து பல முறை புகாா்கள் அளித்தும் நடவடிக்கை இல்லை. இதுகுறித்து மாவட்ட நிா்வாகத்திடம் கேட்டால் கரோனாவை காரணம் காட்டுகின்றனா். சங்கா்நகா் பகுதிகளில் சட்டத்துக்கு புறம்பாக 700 மீ. தோண்டி சுண்ணாம்புக்கல் எடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பல முறை மாவட்ட நிா்வாகத்திடம் புகாா் அளித்தும் நடவடிக்கை இல்லை. பொலிவுறு நகரம் என்ற பெயரில் பல்வேறு திட்டப் பணிகள் தொடங்கி ஒன்றரை ஆண்டுகாலமாக கிடப்பில் உள்ளது. தமிழகத்தில் கரோனாவை காரணம் காட்டி எவ்வித பணிகளும் நடைபெறவில்லை. கரோனா பாதித்தவா்களுக்கு முறையான சிகிச்சை, உணவு வழங்கப்படுவதில்லை. ஆனாலும் கரோனாவுக்காக பல கோடி செலவு கணக்கு காட்டப்படுகிறது என்றாா்.
அப்போது, முன்னாள் எம்எல்ஏ மாலைராஜா உடனிருந்தாா்.