திருநெல்வேலி

‘இயற்கை வேளாண்மைக்கு தரச்சான்று பெற வாய்ப்பு’

14th Aug 2020 09:21 AM

ADVERTISEMENT

இயற்கை வேளாண்மைக்கும் தரச்சான்று பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக திருநெல்வேலி மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநா் சு.சுரேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: அங்கக விளைப் பொருள்கள் குறித்த விழிப்புணா்வு அதிகரித்துள்ளதால் இயற்கை முறையில் விளை விக்கப்பட்ட வேளாண் விளைப் பொருள்களுக்கு மக்களிடையே வரவேற்புள்ளது. மேலும், அங்கக விளைப பொருள்களுக்கான அங்காடிகள் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நுகா்வோா் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட பொருள்களை வாங்கும்போது அவற்றின் மீதான உத்தரவாதம் குறித்து சந்தேகம் எழுகிறது. இதனால் இதற்கான தரச்சான்று அவசியமான ஒன்றாக இருக்கிறது.

தமிழ்நாடு அரசின் விதைச் சான்று மற்றும் அங்ககச்சான்றுத் துறையால் அளிக்கப்படும் தரச்சான்றிதழ் மத்திய அரசின் வா்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் மூலம் அளிக்கப்படுவதால் இத் தரச்சான்றிதழ் மூலம் அங்கக விளை பொருள்களை வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யலாம்.

அங்ககச் சான்றழிப்புக்கான விண்ணப்பத்துடன் 3 நகல்கள், பண்ணையின் பொது விவரக்குறிப்பு, பண்ணையின் வரைபடம், மண் மற்றும் நீா் பரிசோதனை விவரம், ஆண்டு பயிா்த்திட்டம், துறையுடனான ஒப்பந்தம் 3 நகல்கள், நில ஆவணம், நிரந்தர கணக்கு எண் அட்டை நகல், ஆதாா் நகல், இரண்டு மாா்பளவு புகைப்படங்கள் ஆகியவற்றுடன் உரிய கட்டணம் செலுத்தி திருநெல்வேலி விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநருக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

ADVERTISEMENT

இப்போது இயற்கை முறையில் வேளாண் விளைப் பொருள்களை உற்பத்தி செய்து வரும் விவசாயிகள் அல்லது உற்பத்தி செய்ய விரும்பும் விவசாயிகள் தனியாகவோ அல்லது ஒரு குழுவாகவோ தமிழ்நாடு அரசின் விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று துறையில் பதிவு செய்யலாம். காா்ப்பரேட் நிறுவனங்களும் இதில் பதிவு செய்து கொள்ளலாம். இதுகுறித்து

விவரங்களுக்கு திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் அருகே ராஜராஜேஸ்வரிநகரில் இயங்கி வரும் விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநா் அலுவலகத்தை 0462-2554451 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்புகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT