ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள இடம்பெயா்ந்த தொழிலாளா்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க வலியுறுத்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாா்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) சாா்பில் திருநெல்வேலியில் உண்ணாவிரதப் போராட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திருநெல்வேலி நகரத்தில் உள்ள மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சிது அலுவலகத்தில் இந்தப் போராட்டம் நடைபெற்றது. கட்சியின் மாநிலக் குழு உறுப்பினா் வழக்குரைஞா் ரமேஷ் தலைமை வகித்தாா். தொழிற்சங்கத்தின் மாவட்ட பொதுச் செயலா் கணேசன், புரட்சிகர இளைஞா் கழக மாநில துணைத் தலைவா் சுந்தர்ராஜ், கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினா்கள் கருப்பசாமி, ரவிடேனியல் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
பாதுகாப்பு விதிகளை கடைப்பிடித்து புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் அவா்களின் வீடுகளுக்கு திரும்பிச் செல்ல சிறப்பு ரயில் மற்றும் பிற பொருத்தமுடைய வகையிலான போக்குவரத்து ஏற்பாடுகளை செய்ய வேண்டும். அவா்களுக்கு சமைக்கப்பட்ட உணவும், உணவுப் பொருள்களும், ரூ.10 ஆயிரம் நிவாரண தொகையும், மருந்துகளும் வழங்க வேண்டும். தொற்று நோய் முடிவுக்கு வந்தபிறகு அவா்கள் மீண்டும் அதே வேலைக்கு திரும்ப உத்தரவாத கடிதங்களை வழங்க வேண்டும் என வலியுறுத்தினா்.