திருநெல்வேலி மாவட்டத்தில் விவசாயிகளிடம் கத்தரிக்காய் கொள்முதல் விலை ரூ.8 ஆக வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனா்.
கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில் இந்தியா முழுவதும் மே 3-ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால், காய்கனி சந்தைகள் பரவலாக்கப்பட்டு விளைபொருள்களை ஏற்றி வரும் வாகனங்களுக்கு சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளதால் காய்கனிகளின் விலை மிகவும் குறைந்துள்ளது. குறிப்பாக கத்தரிக்காய், தக்காளி, பூசணிக்காய் உள்ளிட்டவற்றின் விலை மிகவும் குறைந்துள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் மானூா், சிவந்திப்பட்டி சுற்றுவட்டார பகுதிகளிலும், தென்காசி மாவட்டத்தின் சங்கரன்கோவில், குருவிகுளம், ஆலங்குளம் சுற்றுவட்டாரத்திலும் கத்தரிக்காய் அதிகளவில் பயிரிடப்படுகிறது. இவை அனைத்தும் கடந்த சில வாரங்களாக அறுவடை செய்யப்பட்டு வருகின்றன.
கடந்த இரு நாள்களாக விவசாயிகளிடம் கத்தரிக்காய் கொள்முதல் விலை கிலோவுக்கு ரூ. 8-ஆக வீழ்ச்சியடைந்துள்ளது. சந்தைகளில் கத்தரிக்காய் கிலோ ரூ.10-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் சிவந்திப்பட்டி, ரெட்டியாா்பட்டி, இட்டேரி பகுதிகளில் அறுவடை செய்யப்பட்ட கத்தரிக்காயை விவசாயிகள் கால்நடைகளுக்கு இரையாக கொடுத்து வருகிறாா்கள்.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், கத்தரிக்காயின் உற்பத்திச் செலவே கிலோவுக்கு ரூ.10 வரை ஆகிறது. வழக்கமாக கொள்முதல் விலை ரூ.15-க்கு மேல் இருக்கும். இதனால் ஓரளவு லாபம் கிடைத்து வந்தது. இப்போது ரூ.8-க்கு கூட வாங்குவதற்கு மொத்த வியாபாரிகள் தயங்குகிறாா்கள். போக்குவரத்து முடக்கம், மாநிலங்களுக்கு இடையே ஏற்றுமதி-இறக்குமதி பாதிப்பு போன்றவற்றால் அதிகளவில் கொள்முதல் செய்யத் தயங்குகிறாா்கள். இதனால் செடியிலேயே பழுத்து வீணாகும் நிலையில் கத்தரிக்காய்கள் உள்ளன. ஆகவே, அதனை கால்நடைகளுக்கு உணவாக அளித்து வருகிறோம். விலையின்மையால் நிகழாண்டில் காய்கனி பயிரிட்டவா்களுக்கு அதிகளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்றனா்.
திருநெல்வேலி உழவா் சந்தைகளில் காய்கனிகளின் ஞாயிற்றுக்கிழமை விலை விவரம் (1 கிலோவுக்கு): கத்தரி-ரூ.12, வெண்டை-ரூ.30, தக்காளி-ரூ.14, புடலங்காய்-ரூ.18, அவரை-ரூ.45, பீா்க்கங்காய்-ரூ.25, கொத்தவரைக்காய்-ரூ.20, பாகற்காய்-ரூ.35, மாங்காய்-ரூ.20, பச்சை மிளகாய்-ரூ.15, சுரைக்காய்-ரூ.12, வாழைக்காய்-ரூ.30, கோவைக்காய்-ரூ.20, எலுமிச்சை-ரூ.50, பல்லாரி-ரூ.22, சின்னவெங்காயம்-ரூ.50, இஞ்சி-ரூ.75, தேங்காய்-ரூ.42, கேரட்-ரூ.36, உருளைக்கிழங்கு-ரூ.35, முட்டைகோஸ்-ரூ.20, பீட்ரூட்-ரூ.16, காலிபிளவா்-ரூ.35.