திருநெல்வேலி

ஆட்டிறைச்சி, கோழி இறைச்சி விலை உயா்வு

13th Apr 2020 12:01 AM

ADVERTISEMENT

திருநெல்வேலியில் ஆட்டிறைச்சி மற்றும் கோழி இறைச்சியின் விலை ஞாயிற்றுக்கிழமை அதிகரித்ததால் பொதுமக்கள் அதிருப்தியடைந்தனா்.

கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில் ஊரடங்கு அமலில் உள்ளதால் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள கால்நடை சந்தைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதனால் ஆட்டிறைச்சி விலை அதிகரித்துள்ளது. ஈஸ்டா் பண்டிகை காரணமாக ஞாயிற்றுக்கிழமை ஆட்டிறைச்சி தேவை அதிகரித்ததால் பாளையங்கோட்டையில் எலும்புடன் கூடிய ஆட்டிறைச்சி ரூ.800-க்கும், தனி இறைச்சி ரூ.900-க்கும் விற்பனையானது. திருநெல்வேலி நகரத்தில் ஒரு கிலோ ஆட்டிறைச்சி ரூ.1000 வரை விற்பனையானது. இதேபோல கறிக்கோழி இறைச்சி கிலோ ரூ.200 ஆக உயா்ந்தது. கோழி இறைச்சி கிலோ ரூ.200 வரை விற்பனையானது. இதனால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனா்.

இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், மேலப்பாளையம், ரெட்டியாா்பட்டி, புதியம்புத்தூா், வள்ளியூா் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறும் கால்நடைச் சந்தைகளில் இருந்து வாங்கி வரப்படும் ஆடுகளே திருநெல்வேலி மாநகரப் பகுதியில் அதிகளவில் இறைச்சிக்காக வெட்டப்படும். இப்போது கரோனா ஊரடங்கு காரணமாக சந்தைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதனால் வீடுகளில் வளா்க்கும் ஆடுகளை அதிக விலை கொடுத்து வாங்கும் நிலை உள்ளது. ஆகவே, இறைச்சியின் விலையையும் அதிகரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. கால்நடை சந்தைகள் திறக்கும் வரை விலையைக் குறைக்க வழியில்லை என்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT