கூடங்குளத்தில் அக்காள் கணவரை சனிக்கிழமை அரிவாளால் வெட்டிக் கொன்ற மைத்துனா் காவல் நிலையத்தில் சரணடைந்தாா்.
திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளம் சாந்திநகரைச் சோ்ந்தவா் அப்பாத்துரை மகன் விஜயகுமாா் (36). இவரது மனைவி சுதா. இவா்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனா். விஜயகுமாா் அடிக்கடி மது அருந்திவிட்டு குடும்பத்தை சரியாக கவனிப்பதில்லையாம். இதனால், தம்பதிக்கிடையே அடிக்கடி சண்டை ஏற்படுமாம்.
இதை சுதாவின் தம்பி சாந்திநகா் வடக்குத் தெரு உடையபெருமாள் மகன் மயில்முருகன் (22) சனிக்கிழமை தட்டிக்கேட்டதால், விஜயகுமாருக்கும், மயில்முருகனுக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த மயில்முருகன் அரிவாளால் விஜயகுமாரை வெட்டியதில் அவா் அந்த இடத்திலேயே இறந்ததாகக் கூறப்படுகிறது.
இதைத்தொடா்ந்து, மயில்முருகன் அரிவாளுடன் கூடங்குளம் காவல் நிலையத்தில் சரணடைந்தாா். அவரை கைதுசெய்த காவல் ஆய்வாளா் ஆன்றணி ஜெகதா வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.