பாளையங்கோட்டை அருகே மனக்காவலம்பிள்ளைநகரில் சாலையில் தேங்கும் கழிவுநீரால் பொதுமக்கள் அவதியடைந்து வருகிறார்கள். கழிவுநீர் ஓடையை சீரமைக்கக் கோரி சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருநெல்வேலி மாநகராட்சியின் 15 ஆவது வார்டுக்குள்பட்ட கென்னடி தெரு, ஆசாத் தெரு, குறுக்குத்தெரு உள்ளிட்ட பகுதிகளில் 250-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள்.
இப் பகுதியில் உள்ள வாருகால் முறையாக தூர்வாரப்படாததால் கழிவுநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது. குடிநீர்க் குழாய் அருகே கழிவுநீர் தேங்கி நிற்பதால் பெண்கள் அவதியடைந்து வருகிறார்கள்.
இதுகுறித்து மாநகராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம். இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த அரசன்பாலு, சங்கர், கிளைச் செயலர் சந்தானம், ஜெயபால் ஆகியோர் தலைமையில் பெண்கள் சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கழிவுநீர் தேங்குவதை சரி செய்யாவிட்டால் மனக்காவலம்பிள்ளைநகர் மக்கள் அனைவரையும் திரட்டி போராட்டத்தில் ஈடுபடுவோம் என போராட்டக் குழுவினர் தெரிவித்தனர்.