திருநெல்வேலி

புரட்டாசி முதல் சனிக்கிழமை: கோயில்களில் சிறப்பு வழிபாடு: நவதிருப்பதிக்கு சுற்றுலா பேருந்து

22nd Sep 2019 04:35 AM

ADVERTISEMENT


புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி, திருநெல்வேலியில் உள்ள பெருமாள் கோயில்களில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர்.
விஷ்ணு பக்தர்களுக்கு புரட்டாசி மாதம் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இந்த நாளில் ஸ்ரீரங்கம், திருப்பதி கோயில்களில் சிறப்பு விழாக்கள் நடைபெறுகின்றன. புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதமிருந்து பெருமாளை வழிபட்டால் மோட்சம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அதன்படி,  புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி, திருநெல்வேலியில் உள்ள பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
பாளையங்கோட்டை அருள்மிகு ராஜகோபால சுவாமி கோயில், திருநெல்வேலி சந்திப்பு வரதராஜபெருமாள் கோயில், மீனாட்சிபுரம் தென்திருப்பதி கோயில், திருநெல்வேலி நகரம் கரியமாணிக்கப்பெருமாள் கோயில் ஆகியவற்றில் சிறப்பு திருமஞ்சனங்கள் நடைபெற்றன.
அபிஷேகம், அலங்காரத்திற்குப் பிறகு, மலர் அலங்காரத்தில் காட்சியளித்த சுவாமியை பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வழிபட்டனர். திருவேங்கடநாதபுரத்தில் உள்ள சீனிவாசபெருமாள் கோயிலில் சிறப்பு கருடசேவை நடைபெற்றது. 
சிறப்பு பேருந்துகள்: திருநெல்வேலி அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில், புரட்டாசி சனிக்கிழமையையொட்டி திருவேங்கடநாதபுரம், கருங்குளம், அத்தாளநல்லூர், எட்டெழுத்துபெருமாள்கோயில், திருக்குறுங்குடி, வனதிருப்பதி ஆகிய கோயில்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.
இதுதவிர, நவதிருப்பதி கோயில்களுக்கு அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில், சிறப்பு சுற்றுலா பேருந்து திருநெல்வேலியில் இருந்து காலை 7 மணிக்கு புறப்பட்டது. இந்தப் பேருந்து ஸ்ரீவைகுண்டம், நத்தம், திருப்புளியங்குடி, இரட்டைத்திருப்பதி, பெருங்குளம், தென்திருப்பேரை, திருக்கோளூர், ஆழ்வார்திருநகரி ஆகிய ஊர்களில் உள்ள நவதிருப்பதி கோயில்களுக்கு சென்றுவிட்டு இரவு திருநெல்வேலி திரும்பியது.
இந்த சுற்றுலா பேருந்தில் ஒரு பயணிக்கு ரூ. 500 கட்டணமாக வசூலிக்கப்பட்டது. தொடர்ந்து, செப்டம்பர் 28, அக்டோபர் 5, 12 ஆம் தேதிகளிலும் சிறப்பு பேருந்து இயக்கப்படவுள்ளது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT