சாம்பவர்வடகரை அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ. 25 ஆயிரம் மதிப்பிலான பொருள்கள் திருடு போனது. இதில் தொடர்புடைய 2 பேரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
சாம்பவர்வடகரை அரசு மேல்நிலைப் பள்ளியில் புதிய கட்டடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணிக்காக வாங்கி வைக்கப்பட்டிருந்த மரப்பலகைகள் மற்றும் இரும்பு கதவுகள் திருடு போனதாம். இதுகுறித்து பள்ளி நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் சாம்பவர்வடகரை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர். இதில் பள்ளியில் துப்புரவு பணியாளராக வேலை பார்த்து வரும் செங்கோட்டையைச் சேர்ந்த ஆறுமுகம்(38), அவரது நண்பர் காளிராஜனுடன் சேர்ந்து பொருள்களை திருடியது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.