திருநெல்வேலி

மொழித் திணிப்பு தனி மனித உரிமையைப் பறிக்கும் செயல்

17th Sep 2019 10:34 AM

ADVERTISEMENT

மொழித் திணிப்பு என்பது தனி  மனித உரிமையைப் பறிக்கும் செயல்; ஆகவே, அதற்கு எதிராக பாமக தொடர்ந்து குரல் கொடுக்கும் என்றார் அந்தக் கட்சியின் தலைவர் ஜி.கே.மணி.
திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் அவர் திங்கள்கிழமை கூறியதாவது:
பருவநிலை மாற்றத்தால் தமிழகத்தில் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டு வருகிறது. திருநெல்வேலி உள்ளிட்ட தென்மாவட்டங்களிலும் வறட்சி நிலவுகிறது. அதேநேரத்தில் மழைக் காலங்களில் நதிகளில் பாய்ந்தோடும் தண்ணீர் வீணாக கடலில் சென்று கலப்பது தொடர்ந்து வருகிறது.
நீர்மேலாண்மை தொடர்பான திட்டங்களை உருவாக்கி மழைநீர் சேமிப்பு, பாதுகாப்புக்கு வழிவகுக்க பாமக வலியுறுத்தியுள்ளது. காவிரி, தாமிரவருணி, வைகை, தென்பெண்ணை, பாலாறு உள்ளிட்ட பிரதான நதிகளின் குறுக்கே கூடுதலாக தடுப்பணைகளை உருவாக்க வேண்டும். தமிழக அரசு குடிமராமத்துப் பணிகளின்கீழ் நீர்நிலைகளைத் தூர்வார எடுக்கும் நடவடிக்கை வரவேற்கத்தக்கது. அதேநேரத்தில் அனைத்து குளம், ஏரி, கண்மாய்களையும் தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.
5, 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு தேவையற்ற ஒன்றாகும். கிராமப்புற ஏழை மாணவர்-மாணவிகளுக்கு தேர்ச்சி மிகவும் முக்கியம். ஆகவே, பொதுத்தேர்வுகளைத் தவிர்த்து தரமான கல்விக்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சுங்கச்சாவடிகளில் வசூலிக்கப்படும் கட்டணத்துக்கு எதிராக பொதுமக்களே போராடும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஆண்டுதோறும் 20 சதவீதம் வரை சுங்கக் கட்டணம் உயர்த்தப்படுவதைத் தவிர்த்துவிட்டு குறைந்த அளவில் பராமரிப்புக் கட்டணம் மட்டும் வசூலிக்க வேண்டும். முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வெளிநாடுகளுக்குச் சென்று பல கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை ஏற்படுத்தியிருப்பது சிறந்த முன்னுதாரணம். அந்த ஒப்பந்தங்களை தொழிற்சாலைகளாக மாற்ற துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். தென்தமிழகத்தில் தொழில்வளர்ச்சி இல்லாத நிலை தொடர்கிறது. கங்கைகொண்டான் உள்ளிட்ட பகுதிகளில் கூடுதலாக தொழிற்சாலைகள் உருவாகவும், வேலைவாய்ப்புகளை அதிகரிக்கவும் நடவடிக்கை தேவை.
ஒரே நாடு, ஒரே மொழி என்ற சிந்தனை மாநில மொழிகளைச் சிதைக்கும் அபாயம் கொண்டது. மொழித் திணிப்பு என்பது தனிமனித உரிமையைப் பறிக்கும் செயலாகும். ஆகவே, அதற்கு எதிராக பாமக தொடர்ந்து குரல் கொடுக்கும். தாய்மொழி காக்க உயிர்த் தியாகம் செய்த வரலாறு தமிழகம் உள்பட பல மாநிலங்களில் உள்ளது. ஆகவே, மாநில மொழிகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டியது மிகவும் அவசியம். கல்வி முறையிலும் ஒரே மொழி கல்வி என்பது சரியானதல்ல.
அதிமுக மற்றும் பாஜகவுடனான கூட்டணி நான்குனேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல்களிலும், உள்ளாட்சித் தேர்தலிலும் தொடரும் என்றார்அவர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT