திருநெல்வேலி

குடிநீர் பிரச்னைக்கு தீர்வு கோரி ஆட்சியர் அலுவலகத்தில் 2 கிராம மக்கள் முற்றுகை

17th Sep 2019 10:36 AM

ADVERTISEMENT

முன்னீர்பள்ளம், மாறாந்தை  கிராம மக்கள் குடிநீர் கேட்டு, காலிக்குடங்களுடன் ஆட்சியர் அலுவலகத்தை திங்கள்கிழமை  முற்றுகையிட்டனர். 
திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. அப்போது, முன்னீர்பள்ளம் கிராம மக்கள் காலிக் குடங்களுடன் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, அளித்த மனு:
முன்னீர்பள்ளம் ஜெ.ஜெ. நகர் -2 பகுதி மக்களுக்கு போதிய குடிநீர் கிடைக்கவில்லை. சாலை சேதமடைந்துள்ளது. தெரு விளக்குகள் எரியவில்லை. எனவே, இப்பிரச்னைகளுக்கு உடனடி தீர்வுகாண வேண்டும்.
இதேபோல், ஆலங்குளம் அருகேயுள்ள மாறாந்தை கிராம  மக்கள்  ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, ஆட்சியரிடம் அளித்த மனு: மாறாந்தை பள்ளிக்கூடத் தெரு, திருவள்ளுவர் தெரு ஆகிய பகுதிகளில் மக்களுக்கு மாதத்தில் 3 நாள்கள் மட்டுமே குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. சுமார் 6 குடம் தண்ணீர் மட்டுமே கிடைக்கிறது. 
அதேவேளையில், ஊராட்சி  அலுவலகம் அருகிலுள்ள நீர்த்தேக்கத் தொட்டி மூலம் அம்பலவாசகர் தெரு மக்களுக்கு தினமும் 3 மணி நேரம் குடிநீர் அளிக்கப்படுகிறது. ஒரே கிராமத்தில் மக்களுக்கு பாரபட்சமான முறையில் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. எங்கள் பகுதிக்கு தினமும் 20 ஆயிரம் லிட்டர் குடிநீர் வழங்க வேண்டும்.  இல்லையெனில்,  எங்கள் பகுதியில் 5 பொது குழாய்கள் அமைத்து தினமும் ஆற்று நீர் விநியோகிக்க வேண்டும்.  
ராதாபுரம் வட்டம்,  மருதப்பபுரம் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் அளித்த மனு:  எங்கள் கிராமத்தில் கடந்த 12 ஆண்டுகளாக ரேஷன் கடை இயங்கி வந்த கட்டடத்தை, கலையரங்கம் கட்டுவதற்காக கடந்த 10-ஆம் தேதி இடித்துவிட்டனர். ரேஷன் பொருள்கள் வாங்க சுமார் 4 கி.மீ. தொலைவில் உள்ள கால்கரை கிராமத்துக்கு செல்ல வேண்டும் என்று கூறுகின்றனர். அங்கு செல்வதற்கு பேருந்து வசதியும் கிடையாது. கலையரங்கத்தை வேறு இடத்துக்கு மாற்றி, அதே இடத்தில் ரேஷன் கடை கட்ட வேண்டும்.
ஆலங்குளம் வட்டம், துத்திகுளம், சிவலிங்கபுரம் கிராம மக்கள் அளித்த மனு: துத்திகுளத்தில் இருந்து மானூர் கால்வாய் கரை வழியாக வீரகேரளம்புதூர் செல்லும் சாலை மிகவும் பழுதாகி இருந்தது. இந்த சாலை வழியாக 8 கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் தங்கள் விளைபொருள்களை எடுத்துச் செல்கின்றனர். நீண்ட நாள் கோரிக்கைக்குப்பின் சாலை அமைக்கும் பணி தொடங்கிய நிலையில், தனி நபர் ஒருவர் கால்வாய் கரை தனது பட்டா நிலத்தில் வருவதாகக் கூறுவதால், சாலைப் பணிக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.  பட்டா மாற்றம் மோசடிக்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்து, சாலைப் பணியை நிறைவு செய்ய வேண்டும்.
சுத்தமல்லி, பெரியார் நகரை சேர்ந்த பெண்கள் 10 பேர் ஆட்சியரிடம் அளித்த மனு: சுத்தமல்லி பகுதியைச் சேர்ந்த அக்காள், தங்கை இருவர் மகளிர் சுயஉதவிக் குழு அமைத்து, வங்கியில் கடன் வாங்கித் தருவதாகக் கூறி அவ்வப்போது பணம் வசூலித்தனர். மேலும், மாதத் தவணையாக ரூ.210 வீதம் வசூலித்தனர். ஆனால், கடனுதவி எதுவும் பெற்றுத் தரவில்லை. இதுவரை 12 பேரிடம் மொத்தம் ரூ.1.44 லட்சம் வசூலித்து, மோசடி செய்துள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, எங்கள் பணத்தை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.   
பாலாமடை அருகேயுள்ள கட்டளை கிராம மக்கள் அளித்த மனு: எங்கள் பகுதியில் உள்ள மக்களுக்கு தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் சரியாக வேலை அளிப்பதில்லை. தங்களுக்கு வேண்டிய நபர்களுக்கு மட்டுமே வேலை அளிக்கிறார்கள்.  அனைவருக்கும் வேலை வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


கல்குவாரிக்கு எதிர்ப்பு 
ராதாபுரம் வட்டம், ஸ்ரீரெங்க நாராயணபுரம் கிராம  விவசாயிகள் ஆட்சியரிடம் அளித்த  மனுவில், "இருக்கன்துறை ஊராட்சியில் உள்ள எங்களது விவசாய நிலம் அருகில் தனியார் நிறுவனம் கல்குவாரி அமைக்க ஏற்பாடு செய்து வருகிறது. இதனால், எங்கள் நிலம் பாதிக்கப்படும். எனவே, கல்குவாரி அமைக்க அனுமதி அளிக்கக் கூடாது' எனக் குறிப்பிட்டுள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT